நாசாவின் அடுத்தக்கட்ட அதிரடி திட்டம் – சந்திரனில் Internet வீடுகள்
சந்திரனில் இன்டர்நெட் வசதியுடன் கூடிய நிரந்தர குடியிருப்பை அமைக்கும் முயற்சியை மேற்கொள்ள நாசா திட்டமிட்டு வருவதாக தெரிவித்து இருக்கிறது.
1969 ஜூலை 20ஆம் தேதி அமெரிக்கா அப்போலோ 11 என்ற விண்கலத்தின் மூலமாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியது. தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இதே போன்ற ஒரு முயற்சியை அமெரிக்கா திட்டமிட்டு, அதற்கான பணிகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. அதே நேரம் தற்போதைய சந்திரனுக்குக்கான பயணம் நீண்ட நெடிய பயணமாக வரையறுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது சந்திரனில் குடியேறுவது, நீண்ட காலம் தங்கியிருப்பது ஆகியவையை முன்னிலைப்படுத்தி தற்போதைய ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக சந்திரனுடைய நிலப்பரப்புகளை ஆய்வு செய்யவும், குடியிருப்பு அமைக்க ஏற்ற இடத்தை தேர்வு செய்யவும் அமெரிக்கா 2022 ஆம் ஆண்டு 25 நாட்கள் சந்திரனை சுற்றி வரும் வகையில் விண்கலத்தை செலுத்தியது. அந்த விண்கலம் சந்திரனின் பகுதிகளை ஆய்வு செய்து, புகைப்படம் எடுத்து நாசாவிற்கு அனுப்பி உள்ளது. அவற்றைக் கொண்டு குடியிருக்க ஏற்ற இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு Artemis திட்டம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இதற்காக பல கட்ட சோதனை முயற்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் அங்கு வாழும் மக்களுக்கான உணவு, தண்ணீர், ஆக்சிஜன் ஆகியவற்றை எவ்வாறு உற்பத்தி செய்வது என்பது குறித்தும், நிரந்தரமாக தங்கு மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் எவ்வாறு சந்திரனில் அமைத்து தருவது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நாசா பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு இருக்கிறது.
குறிப்பாக நோக்கியா நிறுவனத்துடன் விண்வெளியில் 4ஜி நெட்வொர்க் சேவையை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டு இருக்கிறது. மேலும் விண்வெளி ஆடை, ராக்கெட், விண்வெளியில் பயன்படுத்தும் இயந்திரங்கள் ஆகியவற்றை தயாரிக்கவும் பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்த மேற்கொண்டு இருக்கிறது. மேலும் சர்வதேச விண்வெளி மையத்தை போல சர்வதேச சந்திர நிலையத்தை அமைக்கவும் திட்டம் இருப்பதாக நாசா தெரிவித்து இருக்கிறது.
நன்றி – கல்கி