கமல்ஹாசன் ‘நல்லவரா.. கெட்டவரா?’ – த்ரிஷா கொடுத்த பதில்

சென்னையில் நடந்த சினிமா கருத்தரங்கில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் த்ரிஷா கலகலப்பாக உரையாடினர். நல்லவரா கெட்டவரா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அவர்கள் சுவாரஸ்யமாக அளித்த பதில்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
சென்னை கிண்டியில் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு சார்பாக ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தகம் தொடர்பான தென்இந்திய மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேடையில் பேசிய நடிகர் கமல்ஹாசன், சினிமா தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கு ஐடிஐ-களை உருவாக்க வேண்டும் என்றார். சினிமாவை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் தளமாக ஓடிடி இருப்பதாக கூறினார்.
தொடர்ந்து நடிகை த்ரிஷாவுடன், ஃபயர்சைட் சாட் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், “2012ஆம் ஆண்டே ஓடிடி தளம் அறிமுகமாகி இருந்தால் சினிமா உச்ச வளர்ச்சியை கண்டிருக்கும்” என்றார்.
“மணிரத்னத்துடன் இணையும் போது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால் நாயகனுக்கு பின் இவ்வளவு தாமதம் ஏற்பட்டது” என்று கூறினார். தொடர்ந்து பேசிய நடிகை த்ரிஷா, “கமலின் ஒவ்வொரு படத்திலும் பெண்களின் கதாபாத்திரம் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும்” என்றார்.
தக் லைஃப் படத்தின் கதாபாத்திரங்கள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் எழுப்பிய கேள்விக்கு இருவரும் பதிலளிப்பதை தவிர்த்தனர். கமல்ஹாசன் சார் நல்லவரா, கெட்டவரா என்று கேட்டால், அதற்கான பதில் தக் லைஃப் பார்த்தால் கூட தெரியாது என த்ரிஷா கூறினார்.