ட்ரம்பின் அமைதி வாரியத்தில் இணைய மொராக்கோ பச்சைக்கொடி: பிரான்ஸ் போர்க்கொடி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமைதி வாரியத்தில் இணைவதற்கு வட ஆபிரிக்க நாடானா மொராக்கோ Morocco பச்சைக்கொடி காட்டியுள்ளது.
இது தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அழைப்பை மொராக்கோ மன்னர் ஆறாம் முகமது King Mohammed VI ஏற்றுக்கொண்டுள்ளார் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் இன்று (20) அறிவித்தார்.
டிரம்பின் விரிவான அமைதித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தையும், காசா நிர்வாகத்திற்கான தேசியக் குழுவின் அதிகாரப்பூர்வ உருவாக்கத்தையும் வரவேற்கின்றோம் எனவும் அவர் கூறினார்.
ஐ.நா. சபைக்கு மாற்றீடாகவே அமைதி வாரியத்தை நிறுவும் முயற்சியில் ட்ரம்ப் ஈடுபட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் ட்ரம்பின் அழைப்பை பிரான்ஸ் ஜனாதிபதி நிராகரித்துள்ளார் என தெரியவருகின்றது.
இந்த நகர்வு ஐ.நாவை குறைமதிப்புக்கு ஏற்படுத்தும் என்பதாலேயே அழைப்பை பிரான்ஸ் நிராகரித்துள்ளது எனக் கூறப்படுகின்றது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நீடித்து வரும் போரால் பாலஸ்தீனத்தின் காசா பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, அந்தப் பகுதியை ராணுவமற்ற மண்டலமாக மாற்றவும், மீண்டும் அந்தப் பகுதியைக் கட்டியெழுப்பவும் ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது.
அதற்காக உயர்மட்ட ‘அமைதி வாரியம் – Board Of Peace’ என்ற ஒரு அமைப்பையும் உருவாக்கியிருக்கிறது.
இதில் இணையுமாறு இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா உட்பட பல நாடுகளுக்கும் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





