பிலிப்பீன்ஸ் துணை அதிபருக்கு ஆதரவாக தலைநகர் மணிலாவில் திரண்ட ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர்
பிலிப்பீன்ஸ் துணை அதிபர் சாரா டுட்டர்டேவுக்கு ஆதரவாக தலைநகர் மணிலாவில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.இந்தப் பேரணிக்கு கிறிஸ்துவ அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்தது.டுட்டர்டே மீது குற்றம் சுமத்த பிலிப்பீன்ஸ் நாடாளுமன்றம் கொண்டுள்ள திட்டத்தை இந்த அமைப்பு எதிர்க்கிறது.
தமக்கு பிலிப்பீன்ஸ் மக்களிடையே பேராதரவு உள்ளது என்பதை தமது அரசியல் எதிரிகளுக்குக் காட்ட டுட்டர்டே இந்தப் பேரணியை நடத்தியதாகப் பேசப்படுகிறது.இந்தப் பேரணி திங்கிட்கிழமையன்று (ஜனவரி 13) நடைபெற்றது.‘அமைதிக்கான பேரணி’ என்ற வாசகத்தைக் கொண்ட வெள்ளை நிற டீ-சட்டைகளை அணிந்த இக்லேசியா நி கிறிஸ்டோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் டுட்டர்டேவுக்கு ஆதராக முழக்கமிட்டனர்.
பிலிப்பீன்ஸ் நேரப்படி நண்பகல் நேர நிலவரப்படி, மணிலா நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடமான கியிரினோ கிராண்ட்ஸ்டாண்ட்டில் ஏறத்தாழ 1.5 மில்லியன் பேர் கூடினர்.இந்தத் தகவலை அந்நாட்டுக் காவல்துறை வெளியிட்டது.
டுட்டர்டேவுக்கும் பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியருக்கும் எதிரான பகை மோசமடைந்து வரும் நிலையில் இந்தப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
டுட்டர்டேயின் தந்தை ரோட்ரிகோ டுட்டர்டே அதிபராகப் பதவி ஏற்றபோது அவரது குடும்பம் அதிக செல்வாக்குடன் இருந்தது.அந்த அளவு செல்வாக்கு தற்போது இல்லாதபோதிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஆதரவு இருப்பதை இப்பேரணி நிரூபித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பிலிப்பீன்சில் வரும் மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்தப் பேரணி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.ஆனால், டுட்டர்டேயைக் குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாக்கவே இப்பேரணி நடத்தப்பட்டதாக அதிபர் மார்கோசுக்கு ஆதரவாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
2024ஆம் ஆண்டு தேர்தலில் மார்கோஸ் துணை அதிபர் பதவிக்காகப் போட்டியிட்டபோது இக்லேசியா அமைப்பு அவருக்கு ஆதரவு வழங்கியது.இருப்பினும், மார்கோஸ் அத்தேர்தலில் தோல்வி அடைந்தார்.
தாம் கொல்லப்பட்டால் அதிபர் மார்கோஸ், அவரது மனைவி, நாடாளுமன்ற நாயகர் ஆகியோரைக் கொலை செய்ய ஏற்பாடு செய்துவிட்டதாக 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் டுட்டர்டே தெரிவித்திருந்தார்.அதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த பிலிப்பீன்ஸ் அரசு டுட்டர்டேவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது.