கேரளாவில் தஞ்சமடைந்து காதலனை கரம்பிடித்தார் மோனலிசா!
மகா கும்பமேளாவில் பாசிமணி மாலை விற்ற – தனது காந்த கண்களால் பிரபலமான மோனலிசா தனது காதலனை கரம்பிடித்துள்ளார்.
பெற்றோரின் எதிர்ப்புக்கு மத்தியில் காவல்நிலையம்வரை சென்றே அவர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.
மகா கும்பமேளாவில் வீதி வீதியாக பாசிமணி மாலை விற்றுக் கொண்டிருந்தவர்தான் இந்த மோனலிசா.
பாசிமணி வாங்கலியோ என கூவி விற்றுக் கொண்டிருந்த மோனலிசாவின் காந்த கண்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி ஒரே நாளில் பிரபலமானார்.
இதை தொடர்ந்து அவருடன் செல்பி எடுக்க ஏராளமான இளைஞர்கள் திரண்டதால் அவர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டார்.
இதை தொடர்ந்து மோனலிசா சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.
மேலும் கடை திறப்பு விழாக்களிலும் பங்கேற்று அவரது வாழ்க்கை உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.
மோனலிசா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தின் பூவாரில் நடந்து வருகிறது.
இந்நிலையில் அங்கிருந்து மோனலிசாவும் அவரது காதலன் பர்மான் கானும் தம்பனூர் காவல் நிலையத்திற்குச் சென்று தங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாக முறைப்பாடு செய்துள்ளனர்.
மோனலிசாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க அவர் பெற்றோர் முடிவு செய்தனர். பெற்றோர் தங்கள் காதலை எதிர்த்ததால், மோனலிசா தனது காதலனுடன் கேரளா வந்தடைந்தார்.
மற்ற மாநிலங்களில் தங்கள் உறவுக்கு பெரும் எதிர்ப்பு ஏற்படும் என்பதில் உறுதியாக இருந்ததால் கேரளாவைத் தேர்ந்தெடுத்ததாக இருவரும் தெரிவித்தனர்.
இந்நிலையில், மோனலிசா திருவனந்தபுரத்தில் உள்ள கோயிலில் வைத்து தனது காதலன் பர்மான் கானை திருமணம் செய்தார். இருவரின் பாதுகாப்புக்கும் கேரளா அரசு உறுதி ஏற்றுள்ளது.
மோனலிசா திருமணத்தில் கேரளா அமைச்சர் சிவன்குட்டி மற்றும் சிபிஎம் கேரளா மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.




