குழந்தைகளுக்கான மலேரியா மருந்து உலகளவில் முதல் முறையாக அங்கீகரிப்பு!

உலகில் முதன்முறையாக குழந்தைகளுக்கு தகுந்த மலேரியா சிகிச்சை மருந்து அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்து, சில வாரங்களில் ஆப்பிரிக்க நாடுகளில் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, சிறு குழந்தைகளுக்கான தனிப்பட்ட மருந்து எதுவும் இல்லை. அதனால், வயதுவந்தோருக்கான சிகிச்சை முறைகள் தான் பயன்படுத்தப்பட்டு வந்தன. இது குழந்தைகளுக்கு பாதிப்பும், ஆபத்தும் ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது.
மலேரியாவால் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் தான். 2023ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 5.97 லட்சம் பேர் மலேரியாவால் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள், மேலும் 75% பேர் 5 வயதிற்குள் உள்ள குழந்தைகள் என்பது அதிர்ச்சியளிக்கக்கூடிய தரவாகும்.
மருந்தை உருவாக்கிய Novartis நிறுவனம், இது லாப நோக்கமற்ற திட்டம் எனவும், உலக சுகாதாரத்தில் உள்ள சமத்துவப் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் முயற்சி எனவும் தெரிவித்துள்ளது.
மருத்துவ நிபுணர்கள், இந்த மருந்து குழந்தைகள் மற்றும் இளம் பிள்ளைகளை பாதுகாப்பதில் முக்கியமான முன்னேற்றம் எனக் கருதுகின்றனர். எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகள் மலேரியாவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதால், இது ஒரு வரப்பிரசாதமாகும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.