இனவாத பொறிக்குள் இருந்து நாட்டு மக்களை மீட்போம்!
இனவாத பொறிக்குள் இருந்து நாட்டு மக்களை மீட்டு, நாம் அனைவரும் இலங்கையர்கள்தான் என்ற நிலைமையை உணர வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான ஆரம்பமாகவே இலங்கையர் தினம் நடத்தப்படவுள்ளது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
நூட்டில் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டிவிட்டு அரசியல் நடத்தியவர்கள் உள்ளனர். நாம் இனவாதத்தை வெறுக்கின்றோம். தேசிய மக்கள் சக்தியென்பது இலங்கையர்களுக்கான கட்சியாகும். எமது கட்சியின் கொள்கையானது நாட்டுக்கானது.
இன ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு கடந்தகால ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. தமது இனத்தையே அவர்கள் முன்னிலைப்படுத்தினர். இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையால்தான் இந்நாட்டில் போர்கூட ஏற்பட்டது.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி காடையர்கள்தான் அன்று யாழ். நூலகத்தை எரித்து நாட்டை நாசமாக்கினர். 94 ஆயிரம் புத்தகங்களை கொளுத்திய பாவிகள் அவர்கள். தமிழ் இளைஞர்கள் ஆயுதத்தை கையிலெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
எமது ஜனாதிபதி நாட்டில் சிறந்த முன்னுதாரணத்தை வழங்கிவருகின்றார். பிரதமரும் அவ்வாறுதான் சிறப்பாக செயல்படுகின்றார். இலஞ்ச, ஊழல் மோசடிகளில் இருந்து நாடு இன்று மீண்டுவருகின்றது. எனவே, தேசிய ஒற்றுமையையும் நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
அதற்காக அரசாங்கம் அர்ப்புணிப்புடன் செயற்படுகின்றது. அதனால்தான் வடக்கு குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இனவாத பொறிக்குள் இருந்து நாட்டு மக்களை மீட்டு, நாம் அனைவரும் இலங்கையர்கள் எனக் கூரும் நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்கான அடித்தளமாக இலங்கையர் தினம் எதிர்வரும் டிசம்பரில் நடத்தப்படுகின்றது.”என அமைச்சர் சந்திரசேகர் மேலும் குறிப்பிட்டார்.





