அமெரிக்காவில் நடிகர் சிரஞ்சீவிக்கு நடத்தப்பட்ட கோலாகல பாராட்டு விழா…
நடிகர் சிரஞ்சீவிக்கு சமீபத்தில் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி சிரஞ்சீவிக்கு அவருடைய ரசிகர்கள் அமெரிக்காவில் கோலாகல பாராட்டு விழாவை நடத்தி கலக்கியுள்ளனர்.
நம் நாட்டின் மிக உயரிய விருதுகளாகக் கருதப்படுபவை பத்ம விருதுகள். இதில் பத்ம விபூஷண் விருது சமீபத்தில் நடிகர் சிரஞ்சீவிக்கு அறிவிக்கப்பட்டது. தெலுங்குத் திரையுலகில் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலாக கலை சேவையாற்றி வருவதற்காக அவரை கவுரவிக்கும் பொருட்டு இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. பத்ம விபூஷண் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டதற்காக அமெரிக்காவில் அவரது ரசிகர்கள் கோலாகலமாக விழாவை நடத்தியுள்ளனர். இந்த நிகழ்விற்கு பீப்புள் மீடியா ஃபேக்டரி CEO விஸ்வ பிரசாத் பொறுப்பேற்று ஏற்பாடுகளை செய்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் டானா பாயிண்ட்டில் உள்ள ரிட்ஸ் கேரிட்டானில் தான் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மட்டுமல்லாது, ரசிகர்கள் பலரும் சிரஞ்சீவி நெகிழும்படியான பல அன்பானத் தருணங்களை இந்த நிகழ்வில் உருவாக்கியுள்ளனர்.
இதுகுறித்து ரசிகர்கள் கூறும்போது, “இத்தனை வருடங்களாக சினிமா மூலமாக சிரஞ்சீவி எங்களை மகிழ்வித்தார். அவருக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்திருப்பது எங்களுக்கும் பெருமையான தருணம். அதைக் கொண்டாடவே நாங்கள் ஒன்று கூடினோம்” என்றனர்.