வசூலில் புது வரலாறு படைத்த விஜய் தேவரகொண்டாவின் “கிங்டம்” படம்

தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகர்களில் முக்கியமானவர் விஜய் தேவரகொண்டா. சமீபகாலமாக பெரிய வெற்றிப் படங்கள் அவருக்கு இல்லை. அதனால் கிங்டம் படத்தின் வெற்றியை மலைபோல் நம்பி இருந்தார் விஜய் தேவரகொண்டா.
ஜெர்சி போன்ற படங்களை இயக்கிய கௌதம் தின்னனூரி இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஜோமோன் டி. ஜான் மற்றும் கிரீஷ் கங்காதரன் ஆகியோர் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்ச்சூன் 4 சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், இந்தி, கன்னடம் மொழிகளிலும் இப்படம் வெளியாகி உள்ளது.
கிங்டம் திரைப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படம் திரையரங்குகளில் வெளியான முதல் நாள் கலவையான விமர்சனங்களையே பெற்றது. விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு மற்றும் அனிருத்தின் பின்னணி இசை தான் படத்தை தூக்கி பிடிப்பதாக பெரும்பாலானவர்கள் கூறி இருந்தனர்.
விமர்சனங்கள் சற்று கலவையாக வந்தாலும், விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய ட்ரீட் ஆக அமைந்துள்ளது. இதனால் கிங்டம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி உள்ளது. இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.31 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய படம் என்கிற சாதனையையும் கிங்டம் படைத்துள்ளது. அநேகமாக அடுத்த மூன்று நாட்களில் கிங்டம் திரைப்படம் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை எட்டிவிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக சினிமா வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
கிங்டம் திரைப்படம் ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரிலீசுக்கு முன்பே கைப்பற்றிவிட்டது. அதுவும் 53 கோடிக்கு இதன் ஓடிடி உரிமம் விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகிறது.
முதல் நாளிலேயே இமாலய வசூலை வாரிக்குவித்துள்ள கிங்டம் திரைப்படம் வீக் எண்டிலும் நல்ல கலெக்ஷன் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வெளிநாடுகளிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் ஒரு மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. முதல் நாளே ஒரு மில்லியன் டாலர் வசூலித்த விஜய் தேவரகொண்டாவின் முதல் படம் இதுவாகும்.