சினிமாவே பிடிக்காத தனுஷ் ஒரு நடிகரானது எப்படி தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் தனுஷ் 2002ல் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமாகினார்.
தனுஷ், அடுத்தடுத்த படங்களில் நடித்து மிகப்பெரிய இடத்தினை பிடித்துள்ளார். தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
இந்த நிலையில் தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா, “தனுஷுக்கு நடிப்பதற்கு விருப்பம் இல்லை. தான் ஒரு செஃப் ஆகவேண்டும் என்று விரும்பினார். இந்த நிலையில், துள்ளுவதோ இளமை படத்தின் கதையை எழுதி ஒரு கம்பெனிக்கு விற்றுவிட்டேன்.
அதை அவர்கள் புத்தமாக வெளியிட்ட போது, செல்வராகவன் அப்புத்தகத்தில் என் பெயர் இருப்பதை பார்த்துவிட்டு, இந்த கதை நல்லா இருக்கு டாடி, இதை ஏன் நீங்கள் படமாக எடுக்கக்கூடாது என்று கேட்டான்.
நான் கிராமத்து கதைகள் தான் பண்ணியிருக்கிறேன், இது நமக்கு செட்டாகாது என்று சொன்னேன்.
ஆனாலும் இதை எடுக்க வேண்டும் என்று உறுதியாக செல்வராகவன் கூறினான்.
ஒரு கட்டத்தில் இதை நாமளே படமாக்கினால் என்ன என்று எனக்கு தோன்றி அதற்கான பணிகளை ஆரம்பித்தேன்.
அப்போது படத்தில் மகேஷ் கேரக்டரில் நடிக்க கிட்டத்தட்ட 100 – 150 பசங்களை பார்த்தோம். அதில் உதய் கிரன் செட் ஆனார்.
அவரிடம் கதை சொல்லி அவரும் நடிக்கிறேன் என்று சொல்ல, ஆனால் அவரை வைத்து படம் தயாரிக்க ஒரு நிறுவனம் அக்ரிமெண்ட் இருக்கிறது, அவரை வைத்து நீங்கள் படம் எடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.
ஒருமுறை வீட்டில் இருந்து தனுஷ், பள்ளிக்கு செல்வதை பார்த்து இவனே சரியாக இருப்பானே என்று யோசித்து வீட்டில் சொன்னேன்.
அவர்கள் எல்லாம் ஒன்று கூடி, அவன் வாழ்க்கையை கெடுத்து விடாதீங்கன்னு சொன்னாங்க. இவனும் எனக்கு சினிமாவே வேண்டாம் என்று சொன்னான், ஆனால் பள்ளி விடுமுறை சமயத்தில் ஷூட்டிங் வைக்கலாம் என்று கூறி சமாதானப்படுத்தி நடிக்க வைத்தேன். ஆனால் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக படத்தை முடிக்க முடியவில்லை.
75 சதவீதம் ஷூட்டிங் முடிந்துவிட்டது. அப்போது கிராமத்து படம் இயக்க வாய்ப்பு வந்தது, பணத்தேவை காரணமாக அந்த படத்தை இயக்க ஒப்புக்கொண்டதால் சினிமா ஆசையில் இருந்த செல்வாவிடம் மீதமுள்ள ஷூட்டிங்கை முடிக்க சொன்னேன்.
ஆனால் அவன் நான் எடுத்த எல்லாத்தையும் விட்டுவிட்டு புதிதாக ஒரு படம் எடுத்தான். அதுதான் நீங்கள் இப்போது பார்க்கும் துள்ளுவதோ இளமை, அதன்பின் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படத்தில் தனுஷ் நடித்தான்.
ஸ்பாட்டில், யார் தவறு செய்தாலும் செல்வா தனுஷை தான் திட்டுவான். தனுஷ் வீட்டுக்கு வந்து சினிமா எனக்கு வேண்டாம்மா, யார் தப்பு பண்ணாலும் இவன் என்னைத்தான் திட்டுகிறான் என்று சொல்வான். குடும்பத்திற்காக தான் செல்வா இப்படி செய்கிறான் என்று நாங்கள் தனுஷை சமாதானப்படுத்தி நடிக்க வைத்துள்ளார்கள்.
ஆக சுள்ளான் படம் வரைக்குமே தனுஷுக்கு நடிக்க விருப்பமே இல்லை. அதற்கு பிறகு இதுவே அவரது வாழ்க்கையாகிசிட்டது என்று தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார்.