மங்காத்தா தியேட்டரில் மோதல்: TVK கொடியை அசைத்தவரை பதம் பார்த்த அஜித் ரசிகர்கள்!
15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகியுள்ள அஜித்தின் ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ் கொண்டாட்டங்கள், ஒரு கட்டத்தில் விஜய் – அஜித் ரசிகர்கள் இடையேயான மோதலாக மாறியது காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் அஜித் ரசிகர்கள் ‘மங்காத்தா’ திருவிழாவைத் தொடங்கிவிட்ட நிலையில், காரைக்குடியில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் மங்காத்தா படம் பார்க்க விஜய் ரசிகர் ஒருவரும் வந்துள்ளார்.
அவர் சாதாரணமாகப் படம் பார்க்க வராமல், கையில் தனது தலைவரான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சியின் கொடியை மறைத்து எடுத்து வந்துள்ளார்.
படம் தொடங்குவதற்கு முன்னதாக, திரையரங்க வளாகத்தில் அஜித் ரசிகர்கள் ‘தல தல’ என முழக்கமிட்டுக் கொண்டிருந்தபோது, அந்த வாலிபர் திடீரென TVK கொடியை அசைத்து “TVK… TVK… TVK…” என சத்தமாக முழக்கமிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் அவரிடம் “இங்கு இதெல்லாம் வேண்டாம்” என அஜித் ரசிகர்கள் பொறுமையாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் தொடர்ந்து கோஷமிட்டதால் ஆத்திரமடைந்த அஜித் ரசிகர்கள்:
“அடிடா அவனை.. உதைடா அவனை!”
“கொடியைப் பிடுங்கி கிழிங்கடா!” என்று கத்திக்கொண்டு அந்த வாலிபரைச் சூழ்ந்து சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.
இந்தத் திடீர் மோதலால் திரையரங்க வளாகமே போர்க்களமாக மாறியது. நிலைமை மோசமாவதை உணர்ந்த திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள், உடனடியாக ஓடிவந்து அஜித் ரசிகர்களிடமிருந்து அந்த வாலிபரை மீட்டு வெளியே அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, விஜய் – அஜித் ரசிகர்கள் இடையே மீண்டும் ‘ஆன்லைன் போரை’த் தூண்டியுள்ளது.




