ஆஸ்கர் விருது பட்டியலில் ‘கங்குவா’ – சூர்யாவை பெருமைப்படுத்திய கங்குவா
97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிற்கான படங்களின் பட்டியலுக்கு ‘கங்குவா’ படக்குழுவினர் விண்ணப்பித்திருந்தனர். அதில் சிறந்த படத்திற்கான முதற்கட்ட பட்டியலில் சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படம் இடம் பிடித்திருக்கிறது. இந்த செய்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆஸ்கர் பட்டியலில் இடம்பெறுவதற்கு அமெரிக்க திரையரங்குகளில் குறைந்தது 7 நாட்கள், 50 திரையரங்குகளில் திரையிடப்பட்டிருக்க வேண்டும். அந்த வகையில் கங்குவா திரைப்படம் திரையிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் ‘கங்குவா’ படக்குழுவினர் ஆஸ்கர் விருதுக்கு சிறந்த படங்களுக்கான பிரிவில் ‘கங்குவா’ படத்தை விண்ணப்பித்திருந்தனர்.
அதில் ‘கங்குவா’ திரைப்படம் முதற்கட்ட பட்டியலில் தேர்வாகி இருக்கிறது. அந்த பட்டியலில் மொத்தம் 323 திரைப்படங்கள் இடம் பெற்று இருக்கின்றன. இந்த அனைத்து படங்களையும் பார்த்து அடுத்த கட்ட படங்களை தேர்வு குழுவினர் தேர்வு செய்வார்கள்.
சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ மற்றும் ‘ஜெய் பீம்’ திரைப்படங்கள் இதேபோன்று ஆஸ்கர் விருதுக்கு ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்டு முதற்கட்ட பட்டியலில் இடம் பிடித்தன. அந்தப் படங்கள் ஓடிடியில் வெளியாகி இருந்தாலும் அமெரிக்காவில் ஆஸ்கருக்காக ஏழு நாட்கள் 50 திரையரங்குகளில் திரையிடப்பட்டன.
இந்த நிலையில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படத்தையும் விண்ணப்பித்து இருந்தனர். அந்த படமும் முதற்கட்ட பட்டியலுக்கு இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், படம் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. பாக்ஸ் ஆஃபீஸ் வசூலிலும் பின்தங்கிய நிலையில், ஆஸ்கர் ரேஸில் ‘கங்குவா’ இடம்பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.






