2000 கோடியை தட்டித்தூக்குமா “கங்குவா”?? எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே.இ ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் “கங்குவா”. பிரபல நடிகர் சூர்யா முதல் முறையாக இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் இணைந்திருக்கும் திரைப்படம் இது.
கற்பனை கலந்த ஒரு அற்புத கதையை இந்த திரைப்படத்தில் அவர் கையாண்டிருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. சுமார் 500 கோடி ரூபாய்க்கு மேல் மெகா பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களின் கடினமான உழைப்பில் இந்த கங்குவா திரைப்படம் உருவாகி இருப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பல மேடைகளில் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலக அளவில் சுமார் 38 மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் முழு வீச்சில் இப்போது பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கங்குவா திரைப்படம் 38 மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், தமிழ் மொழியில் உள்ள சூர்யாவின் குரலையே, AI தொழில்நுட்பம் மூலம் 38 மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பு செய்துள்ளதாக தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவிருந்து, தற்பொழுது அதனுடைய ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு நவம்பர் 14ஆம் தேதி கங்குவா திரைப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, மொத்த திரைப்படத்தின் நீளம் சுமார் 2.30 மணி நேரம், இதில் 2.20 மணி நேரம் Goosebumps மொமெண்ட்ஸ்களாக மட்டுமே நிறைந்து இருக்கிறது.
ஆகவே இந்த திரைப்படம் மெகா ஹிட் திரைப்படமாக மாறுவதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை என்று கூறியிருக்கிறார். அதேபோல கங்குவா திரைப்படம் உலக அளவில் கண்டிப்பாக 2000 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.
நடிகர் சூர்யாவின் திரை வரலாற்றிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், இரு வெவ்வேறு கதாபாத்திரங்களில் அவர் நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து இரண்டு வெவ்வேறு விதமான சிங்கிள் பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் தான் கங்குவா திரைப்படம் உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.