ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஜெயலலிதா… காரணம் தெரியுமா?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் இன்று அவரது தொண்டர்களால் தமிழ்நாடு முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிற்கு சென்று திருவுருவ புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது அவருடன் அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையடுத்து பேசிய ரஜினிகாந்த்,”தற்போது 4வது முறையாக வேதா இல்லத்திற்கு வருகிறது. 1977இல் இங்கு முதல்முறையாக வந்தேன். இரண்டு பேரும் இணைந்து திரைப்படத்திற்கு நடிக்க பேச்சுவார்த்தை போய்கொண்டிருந்தது, அதற்காக வந்தேன்.
2வது முறை ராகவேந்திரா திருமண மண்டபத்தை அவர் திறந்துவைக்க அழைப்புவிடுக்க வந்தேன். 3வது முறை எனது பெண்ணின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க வந்தேன்.
ஜெயலலிதா இல்லாவிட்டாலும் அவரது நினைவு என்றும் அனைவரின் மனதில் நிலைத்திருக்கும்.
அவர்கள் வாழ்ந்த வீட்டில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களின் இனிமையான, சுவையான நினைவுகளுடன் செல்கிறேன். என்றும் அவர் நாமம் வாழ்க” என பேசியிருந்தார்.
இதில் நெட்டிசன்கள் பலரும் ரஜினிகாந்தும் – ஜெயலலிதாவும் நடிப்பதாக இருந்ததா, அது என்ன திரைப்படம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரஜினிகாந்த் இன்று பேசும்போது எந்த திரைப்படம் என குறிப்பிடவில்லை என்பதால் அங்கு நடந்தது எந்த படம் குறித்த பேச்சுவார்த்தை என்பது நமக்கு சரியாக தெரியவில்லை. ஆனால், 1980இல் ஜெயலலிதா எழுதிய ஒரு கடிதத்தில் அவர் ரஜினியுடன் நடிக்க இருந்தது பற்றி தெரிவித்திருந்தார்.
ஜெயலலிதா தமிழக அரசியலில் 1982இல் கால் பதித்தார். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். அந்த நேரத்தில், பொதுவெளியில் சில கருத்துக்கள் வலம் வந்தன. அதாவது, ஜெயலலிதாவுக்கு தற்போது மார்கெட் இல்லை, அவரை யாரும் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்கவில்லை என செய்திகளும் வெளியாகின. இது ஜெயலலிதாவின் காதுகளையும் எட்டியது.
உடனே ஜெயலலிதா 1980ஆம் ஆண்டு இதே போயஸ் கார்டன் வேதா இல்லம் லெட்டர்ஹெட்டில் கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த கடிதத்தில் அவர் எழுதியிருந்ததாவது,”எனக்கு வந்த சில வாய்ப்புகளை நானே வேண்டாம் என சொல்லி தவிர்த்துவிட்டேன்.
பாலாஜி தாயரிப்பில், ரஜினிக்கு ஜோடியாக கதாநாயகி வாய்ப்பு எனக்கே முதன்முதலில் வந்தது என்பது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்காது. நான் அதை வேண்டாம் என நிராகரித்த பின்னரே, பாலாஜி அந்த கதாபாத்திரத்திற்கு ஸ்ரீப்ரியாவை ஒப்பந்தம் செய்தார்” என எழுதியிருந்தார்.
மேலும், ஜெயலலிதா எழுதிய அந்த கடிதத்தில்,”இந்தியாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவர் பாலாஜி மற்றும் தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்க, இவ்வளவு பெரிய வாய்ப்பை நான் நிராகரிக்க முடியும் என்றால், மீண்டும் நடிப்பதற்கு நான் சிறிதும் விரும்பவில்லை என்பதை இது உறுதியாக நிரூபிக்கவில்லையா என்ன?” என அவர் எழுதியிருந்தார்.
சுஜாதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கிய பில்லா திரைப்படம் 1980ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் கலக்கியிருப்பார். அதில், பில்லா கதாபாத்திரத்தை பழிவாங்க வருவதும், அதன்பின் பில்லா போல் நடிக்கும் ராஜப்பா கதாபாத்திரத்தை காதலிக்கும் ‘ராதா’ கதாபாத்திரத்தில் நடிக்கவே ஜெயலலிதாவிடம் முதலில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
ஆனால் அது கைக்கூடவில்லை. ரஜினிகாந்த் கடைசிவரை ஜெயலலிதாவுடன் திரைப்படத்தில் நடிக்கவில்லை. ஜெயலலிதா கடைசியாக 1980இல் பி.லெனின் இயக்கத்தில் “நதியை தேடி வந்த கடல்” என்ற திரைப்படத்தில் நடித்து திரைத்துறைக்கு முழுக்கு போட்டார்.