“என்மேல வழக்கு போட்ட எவனும் ஜெயிக்கல” மார் தட்டுகின்றார் அட்லீ
ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகாகி இருக்கும் இயக்குனர் அட்லீ, தன் மீது வைக்கப்பட்ட கதை திருட்டு புகார்களை தான் எதிர்கொண்டது குறித்து பேசி உள்ளார்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் படத்தை இயக்க வேண்டும் என்பது பல்வேறு ஜாம்பவான் இயக்குனர்களின் கனவாக இருக்கும் நிலையில், அதை தன் 5-வது படத்திலேயே எட்டிப்பிடித்து சாதனை படைத்துள்ளார் அட்லீ.
ஷாருக்கனை வைத்து அவர் இயக்கிய ஜவான் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அட்லீயின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தாலும், அவர் மீது முதல் படத்தில் இருந்தே எழும் விமர்சனம் என்றால் அது கதை திருட்டு சர்ச்சை தான்.
மெளன ராகம் படத்தை காப்பி அடித்து தான் அவர் ராஜா ராணி படத்தை எடுத்ததாக கூறப்பட்டது. பின்னர் விஜய்யை வைத்து அவர் இயக்கிய தெறி திரைப்படம் விஜயகாந்தின் சத்ரியன் படத்தின் காப்பி என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
அதேபோல் அவர் இயக்கத்தில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் ரஜினிகாந்த் மூன்று முகம் படத்தின் காப்பி என்று கூறினர். ஒரு சிலரோ அது அபூர்வ சகோதரர் படத்தின் காப்பி என ஒப்பிட்டு விமர்சித்தனர்.
கடைசியாக விஜய் – அட்லீ கூட்டணி வெளிவந்த பிகில் படமும், ஷாருக்கானின் சக்தே இந்தியா படத்தின் காப்பி என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இது ஒருபுறம் இருக்க அட்லீ மீதான கதை திருட்டு புகார்கள் நீதிமன்றம் வரையும் சென்றிருக்கின்றன.
இந்த நிலையில், ஜவான் பட புரமோஷனுக்காக அளித்த பேட்டியில், இயக்குனர் அட்லீயிடம் இந்த கதை திருட்டு சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்து அவர் கூறியதாவது :
“கதை திருட்டு தொடர்பாக என்னை நீதிமன்றம் வரை கொண்டு சென்றனர். ஆனால் அனைத்து வழக்குகளிலும் நான் வெற்றிபெற்றேன். ஒருவர் மெர்சல் மூன்று முகம் படத்தின் காப்பி என சொன்னார். இதையடுத்து என் மீது வழக்கு போட்ட தயாரிப்பாளருக்கு ஏமாற்றமே மிஞ்சியது, கடைசியில் அவர் தான் அபராதம் கட்டினார்.
அதேபோல் மற்றொரு வளரும் இயக்குனர் ஒருவர் பிகில் கதை அவருடையது என கூறி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இயக்குனர் சங்கம் அது ஒரிஜினல் ஸ்கிரிப்ட் தான் என சான்றிதழ் அளித்தனர். அதை வைத்து அந்த வழக்கிலும் வெற்றிபெற்றேன்” என கூலாக பதிலளித்துள்ளார் அட்லீ.
Thank you machi 😊 https://t.co/TRkSALtGIE
— atlee (@Atlee_dir) September 6, 2023