ஜனவரி 9 விஜய்.. ஜனவரி 10 நான்! – சிவகார்த்திகேயன் மாஸ் பேச்சு
தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் பொங்கல் ரேஸில், சுதா கொங்கரா – சிவகார்த்திகேயன் கூட்டணியின் ‘பராசக்தி’ திரைப்படம் இணைந்துள்ளது. சென்னையின் தனியார் கல்லூரியில் நடைபெற்ற இப்படத்தின் பிரம்மாண்ட பாடல் வெளியீட்டு விழாவில், நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய விஷயங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், “பராசக்தி என்ற பெயரே ஒரு தனி சக்திதான். இந்தப் படம் ரசிகர்களை 1960-களுக்கு அழைத்துச் செல்லும் ஒரு டைம் டிராவல் அனுபவமாக இருக்கும். மாணவர்கள் எவ்வளவு வலிமையானவர்கள் என்பதை இந்தப் படம் அழுத்தமாகப் பேசும். பலரின் தியாகங்களை நேர்மையாகவும், மரியாதையுடனும் இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறோம்” என்றார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் அதர்வா மற்றும் ஸ்ரீலீலா இணைந்து நடித்துள்ளனர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) ஒரு பவர்ஃபுல் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதுதான். ஜி.வி. பிரகாஷின் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
மேலும் இந்த விழாவில், தளபதி விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகம்’ மற்றும் தனது ‘பராசக்தி’ படம் ஒரே நேரத்தில் வெளியாவது குறித்து எழும் சர்ச்சைகளுக்கு சிவகார்த்திகேயன் முற்றுப்புள்ளி வைத்தார்.
‘பராசக்தி’ படம் முதலில் 2025 தீபாவளிக்கே வெளியாக வேண்டியது. ஆனால், அப்போது விஜய்யின் படம் வருவதால் தள்ளிவைத்தோம். பின்னர் பொங்கலுக்கு திட்டமிட்டபோது, ‘ஜனநாயகம்’ படமும் அதே தேதியில் வருவதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன் என சிவகார்த்திகேயன் கூறினார்.
இந்த தேதிகள் மோதல் குறித்து விஜய்யின் மேலாளரிடம் பேசியபோது, விஜய் தரப்பில் இருந்து வந்த பதில் மிகவும் நேர்மறையானது. “பொங்கல் பண்டிகை பெரியது, இரண்டு படங்களும் ஓடுவதற்கு தியேட்டர்களில் போதுமான இடம் இருக்கிறது. பராசக்தி படத்திற்கு எனது வாழ்த்துகள்” என்று விஜய் கூறியதாக சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மேலும் சிவகார்த்திகேயன் ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோளைவைத்தார்
அதாவது விஜய் “33 வருடங்களாக நம்மை மகிழ்வித்த ஒரு கலைஞர், இது தனது கடைசி படம் என்று சொல்லும்போது அதை நாம் கொண்டாட வேண்டும். எனவே, ஜனவரி 9-ம் தேதி தியேட்டருக்குச் சென்று ‘ஜனநாயகம்’ படத்தை கொண்டாடுங்கள். அடுத்த நாள், ஜனவரி 10-ம் தேதி ‘பராசக்தி’ படத்தைக் கொண்டாடுங்கள். இது கோலிவுட்டின் அண்ணன்-தம்பி பொங்கல்!” என்று அவர் கூறினார்
தன்னைச் சுற்றி எழும் எதிர்மறை விமர்சனங்கள் குறித்துப் பேசிய அவர், “1000 பேர் என்னை கீழே தள்ள நினைத்தாலும், லட்சக்கணக்கான ரசிகர்கள் என்னை தாங்கிப் பிடிக்க இருக்கிறீர்கள். அம்மாவிடம் சொன்னது போலவே, இன்று நான் உங்கள் அன்பால் வெற்றி பெற்றுவிட்டேன்” என்று உணர்ச்சிகரமாகப் பேசினார்.





