ஜனநாயகன் ‘செல்ல மகளே’ பாடல் ரிலீஸ்: தந்தை – மகள் பாசத்தில் நெகிழ வைத்த விஜய்!
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே “தளபதி கச்சேரி”, “ஒரு பேரா வரலாறு” ஆகிய பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், தற்போது தந்தை-மகள் பாசத்தை உணர்த்தும் “செல்ல மகளே” பாடல் வெளியாகியுள்ளது.
இப்பாடலை நடிகர் விஜய் அவரே பாடியுள்ளார். “கேட்காமலே உனக்கு தர உயிர் இருக்கு… செல்ல மகளே” என அவர் பாடும் வரிகள் கேட்பவர்களை உருக வைக்கிறது.

மேலும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு விவேக் வரிகள் எழுதியுள்ளார். ஒரு தந்தை தனது மகளுக்குப் பாடும் தாலாட்டு போலவும், அவர்களின் அழகான உறவை வெளிப்படுத்தும் விதமாகவும் இப்பாடல் அமைந்துள்ளது.
லிரிக்கல் வீடியோ (lyrical video ) வில் விஜய்யுடன் ஒரு சிறுமி இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இடம் பெற்றுள்ளன. இது படத்தில் விஜய்யின் குடும்பப் பின்னணி மற்றும் சென்டிமென்ட் காட்சிகளின் மீதான ஆவலைத் தூண்டியுள்ளது.
இன்று பாடல் வெளியான கையோடு, படத்தின் பிரம்மாண்ட ஆடியோ லான்ச் (Audio Launch) நாளை (டிசம்பர் 27) மலேசியாவில் உள்ள புகித் ஜலில் (Bukit Jalil) ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

இதற்காக விஜய் இன்று காலை தனது தாயார் ஷோபா மற்றும் அனிருத்துடன் தனி விமானத்தில் மலேசியா சென்றடைந்தார். கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது விஜய்யின் கடைசி சினிமா மேடை என்பதால், சுமார் 80,000 ரசிகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், அட்லீ, நெல்சன் மற்றும் நடிகர்கள் பிரபுதேவா, தனுஷ் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இதில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது






