தப்பிச்சென்ற வேன்மீது யாழில் துப்பாக்கிச்சூடு: இளைஞன் உயிரிழப்பு!
யாழில் பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிச் செல்ல முயன்ற வேன்மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலைவேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்றை பொலிஸார் தடுத்து நிறுத்த முயன்ற போது, நிறுத்தாமல் மண்டைதீவு நோக்கித் தப்பிச் சென்றுள்ளது.
இதையடுத்து, மண்டைதீவு வீதித் தடையைப் பரிசோதித்து விட்டு அல்லைப்பிட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்த, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வாகனத்திற்கு இது குறித்து அறிவிக்கப்பட்டது.
அந்த வாகனம், தப்பிச் சென்ற சிற்றுந்தை நிறுத்த முயற்சித்த போதிலும், அது நிறுத்தாமல் தப்பிச் சென்றதால், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் வேன் சாரதி படுகாயம் அடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே உயிரிழந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேனில் இருந்த இரண்டு பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர்.





