யாழில் நடந்த துப்பாக்கிச்சூடு: அரசு கூறுவது என்ன?
“யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa இன்று (10) தெரிவித்தார்.
ஊர்காவற்றுறை பொலிஸாரும், யாழ்.குற்ற விசாரணைப் பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன எனவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், வேனொன்றை செலுத்திச் சென்ற 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்தார்.
வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவராவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில், அல்லைப்பிட்டி சந்தியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்த பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த வேனை நிறுத்துமாறு கட்டளையிட்டனர்.
எனினும், அந்த வேன் பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்ததால், அதனை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் முன்னெடுக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுவன், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது இன்று கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளிக்கையிலேயே விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.
வாகனத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதற்கு முன்னர் வானத்தை நோக்கி பலமுறை சூடு நடத்தப்பட்டுள்ளது. அந்த எச்சரிக்கையையும் மீறியதாலேயே அடுத்தக்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, தனது பெறாமகன் குடும்பக் கஷ்டம் காரணமாகவே சிறு வயதில் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாது வாகனம் ஓட்டுவதைத் தொழிலாகச் செய்து வந்தார் என்று உயிரிழந்த சிறுவனின் சித்தி கண்ணீர்மல்கத் தெரிவித்துள்ளார்.





