கருத்து & பகுப்பாய்வு

தமிழை வாசிக்கச் சொல்லித் தருவதன் அவசியம்

பத்து இருபது வருடங்களுக்கு முன்பு பிள்ளைகளை ஹிந்தி, நடனம், பாட்டு வகுப்புகளுக்கு அனுப்புவார்கள். தற்போதைய குழந்தைகளை கீபோர்டு வகுப்பு, நீச்சல் வகுப்பு, ஸ்கேட்டிங் வகுப்பு, ஏன் கேலிகிராபி எனப்படும் கையெழுத்து அழகாக இருப்பதற்காகக்கூட தனியாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆனால், தாய்மொழியான தமிழை வளர்ந்த குழந்தைகளுக்குக் கூட தப்பில்லாமல் வாசிக்கத் தெரிகிறதா என்பது ஒரு மிகப்பெரிய கேள்வி.

சமீபத்தில் உறவினர் வீட்டு விசேஷம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். எழுபத்தாறு வயதான என் பெரியப்பா அங்கே வந்திருந்த ஒரு உறவுக்கார சிறுவனை அழைத்து, அன்றைய தமிழ் நாளிதழைக் கொடுத்து, ‘’என் கண்ணாடியை வீட்டுல மறந்து வச்சுட்டு வந்துட்டேன். தலைப்பு செய்தி என்னனு கொஞ்சம் வாசிடா கண்ணா’’ என்றார். அந்தப் பையனும் திக்கித் திணறி தப்பும் தவறுமாக வாசித்தான். இத்தனைக்கும் அவன் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன்.

‘’என்னடா பத்தாங்கிளாஸ் படிக்கிற பையன், இப்படி தமிழைத் தப்பு தப்பா வாசிக்கிற?’’ என்ற பெரியாப்பாவிடம், ‘’அதுக்கு என்ன பண்றது தாத்தா? நான் படிக்கிறது சி.பி.எஸ்.இ ஸ்கூல்ல’’ என்றான் சிறுவன் பெருமையாக. ‘’அடேய் பையா, பதினைஞ்சு வயசான உனக்கு தாய்மொழியை சரியா வாசிக்கத் தெரியலைங்கறது அவமானம்டா. பிறந்ததில் இருந்து எல்லோர் கூடவும் தமிழ்லதானே பேசுற? அதை வாசிக்கத் தெரியலன்னா எப்படிடா கண்ணா?’’ என்றார் பெரியப்பா வருத்தமாக. அவனோ, ‘’எங்க க்ளாஸ்ல பாதிப் பேரு என்னை மாதிரிதான்’’ என்று கூலாக சொல்லிவிட்டு நகர்ந்தான். இதை கவனித்துக் கொண்டிருந்த எனக்கும் மிகவும் வருத்தமாகத்தான் இருந்தது.

சைனா, ஜப்பான் போன்ற நாடுகளில் தாய்மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் தருகிறார்கள். அவர்கள் ஆங்கிலத்தை ஒரு பொருட்டாகவே கருதுவது இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தான் தாய்மொழிக்கு இந்த நிலைமை. தமிழகம் தவிர பிற மாநிலங்களில் தங்கள் மாநில மொழியை மிகவும் மதிக்கிறார்கள். ஆறாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளுக்கே சில பள்ளிகளில் ஜே.ஈ.ஈ கோச்சிங் தருகிறார்கள். ஆனால், தாய்மொழியை பிள்ளைகள் தப்பில்லாமல் வாசிக்கத் தெரியாதது குறித்து சிறு வருத்தம் கூட பெற்றோர்களுக்கு மற்றும் சில ஆசிரியர்களுக்கும் இல்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

வெறும் மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாக மட்டும்தான் பெற்றோரும் ஆசிரியர்களும் பிள்ளைகளைக் கருதுகின்றனர். எனவே, அடிப்படையான வாசிப்பு பழக்கத்தை நிறைய பள்ளிகளில் ஆசிரியர்கள் பிள்ளைகளுக்குத் தருவது இல்லை. பாடப் புத்தகத்தில் உள்ள பாடங்களையாவது வகுப்பில் வாசிக்கும் பழக்கத்தை பள்ளியில் ஆசிரியர்கள் தரவேண்டும். வீட்டில் பெற்றோர்கள் சிறு வயது முதற்கொண்டு சிறு சிறு சொற்களை சத்தமாக வாசித்து பழகக் கட்டாயம் சொல்லித் தர வேண்டும். நிறைய படங்கள் கொண்ட கதைப்புத்தகங்களை வாங்கித் தந்து படிக்கச் சொல்ல வேண்டும். இதனால் தமிழை நன்றாக வாசிக்கத் தெரிந்துகொள்வதுடன், புத்தகம் வாசிக்கும் அருமையான பழக்கமும் பிள்ளைகளுக்கு வரும்.

 

(Visited 38 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

உலகிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வானிலை ஆய்வகம்

  • April 22, 2023
உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக வானிலை ஆய்வகத்தின் அறிக்கை இந்த விடயம் கூறுகிறது. உலக வானிலையின் ஆகக்கடைசி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த விடயம் கவலை
error: Content is protected !!