அக்டோபர் 7 தாக்குதல் தொடர்பாக இஸ்ரேலிய இராணுவ தளபதிகள் பணிநீக்கம்
இஸ்ரேல்(Israel) இராணுவம் மூன்று தளபதிகளை பணிநீக்கம் செய்வதாகவும், நாட்டின் வரலாற்றில் மிகக் கொடிய தாக்குதலான 2023ம் ஆண்டு அக்டோபரில் ஹமாஸ்(Hamas) நடத்திய தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக பல மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.
முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று இஸ்ரேலிய இராணுவத் தலைவர் இயல் ஜமீர்(Eyal Zamir) அழைப்பு விடுத்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த பணி நீக்கங்கள் இடம்பெற்றுள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளின் பட்டியலில் மூன்று பிரிவு தளபதிகள் அடங்குவர், அவர்களில் ஒருவர் 2023ம் ஆண்டு இராணுவ உளவுத்துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.
வெளியிடப்பட்ட இராணுவ அறிக்கையில், காசா பகுதியில் இருந்து ஹமாஸ் தொடங்கிய தாக்குதலைத் தடுக்க ஆயுதப்படைகள் தவறியதற்கு அவர்கள் தனிப்பட்ட பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.




