தெற்கு எல்லையில் சுவர் எழுப்பும் இஸ்ரேல் – ஐ.நாவிடம் முறையிடும் லெபனான்!
தெற்கு எல்லையில் இஸ்ரேல் கான்கிரீட் சுவரைக் கட்டுவது குறித்து ஐநா . பாதுகாப்பு கவுன்சிலிடம் முறைப்பாடு அளிக்கப்போவதாக லெபனான் நேற்று கூறியுள்ளது.
இந்த சுவர் ஐ.நா.வால் வரைபடமாக்கப்பட்ட நீலக் கோட்டைத் தாண்டி நீண்டுள்ளதாக லெபனான் தெரிவித்துள்ளது.
லெபனானையும், இஸ்ரேலையும் பிரிக்கும் எல்லையை இந்த நீலக் கோடு குறிக்கிறது.
இஸ்ரேலின் தற்போதைய நடவடிக்கையானது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1701 ஐ மீறுவதாகவும் லெபனான் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா செய்தி தொடர்பாளர் ஒருவர், இந்த சுவர் 4,000 சதுர மீட்டருக்கும் அதிகமான லெபனான் நிலத்தை குடியிருப்பாளர்கள் அணுக முடியாததாக மாற்றியுள்ளது என்றும், லெபனானில் உள்ள ஐ.நா. இடைக்காலப் படை (UNIFIL) அதை அகற்றக் கோரியுள்ளது என்றும் கூறினார்.
இதற்கிடையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர், சுவர் நீலக் கோட்டைக் கடக்கிறது என்ற குற்றச்சாட்டை நிராகரித்து, இது 2022 இல் தொடங்கப்பட்ட ஒரு பரந்த தற்காப்புத் திட்டத்தின் ஒரு பகுதி என்று கூறினார்.
தற்போதைய போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் வடக்கு எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.





