ட்ரம்பின் காசா போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் – நெதன்யாகு வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை சமாதான உடன்படிக்கைக்கு இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சமாதான உடன்படிக்கைக்கு இணங்க வேண்டும் என ஹமாஸ் அமைப்புக்கு டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் இறுதி எச்சரிக்கையை விடுத்திருந்தார்.
இவ்வாறான நிலையில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் சமாதான உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
இணக்கப்பாட்டுக்கு அமைய எதிர்வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் அரசாங்கமும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளையும் விடுவிக்கும். அத்துடன் இஸ்ரேலிய படைகள் காசாவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு பின்வாங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தடைகள் இன்றி மனிதாபிமான உதவிகளை வழங்க காத்திருக்கும் பெருமளவான லொறிகள் நிவாரணப் பொருட்களுடன் காசாவுக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.