இஸ்ரேலும் சிரியாவும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் ; துருக்கிக்கான அமெரிக்க தூதர்

அண்மையில், சிரியாவில் டுரூஸ் சமூகத்தினருக்கும் பெடோயின் சமூகத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, டுரூஸ் சமூகத்தினரைப் பாதுகாக்க ஜூலை 16ஆம் தேதியன்று சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
சிரியாவில் டுரூஸ் சமூகத்தினர் சிறுபான்மையினத்தவர்கள்.லெபனானிலும் இஸ்ரேலிலும் டுரூஸ் சமூகத்தினர் உள்ளனர். அவர்கள் சிறுபான்மையினத்தவர்கள் என்றபோதிலும் செல்வாக்குமிக்கவர்கள்.இந்நிலையில், போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேலும் சிரியாவும் இணக்கம் தெரிவித்துள்ளன.
“சண்டை போடுவதை நிறுத்திவிட்டு மற்ற சிறுபான்மையினத்தவர்களுடன் இணைந்து புதிய, ஒற்றுமைமிக்க சிரியாவை உருவாக்கும்படி டுரூஸ், பெடுவான், சன்னி முஸ்லிம்கள் ஆகிய சமூகங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்,” என்று துருக்கிக்கான அமெரிக்கத் தூதர் டோம் பராக் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இஸ்ரேலுக்கும் சிரியாவுக்கும் இடையிலான போர் நிறுத்தத்துக்கு துருக்கி, ஜோர்டான் உட்பட அண்டை நாடுகளும் ஆதரவு வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலியத் தூதரகமும் கனடாவில் உள்ள சிரியா தூதரகமும் கருத்து தெரிவிக்கவில்லை.
டுரூஸ் சமூகத்தினருக்கும் பெடுவான் சமூகத்தினருக்கும் இடையிலான மோதல் சிரியாவின் சுவேய்டா மாநிலத்தில் நிகழ்ந்தது.
அடுத்த இரண்டு நாள்களுக்கு அந்த மாநிலத்துக்குள் நுழைய சிரியா ராணுவத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாக வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 19) இஸ்ரேல் கூறியது.