சீன ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளியா? வெனிசுலா மூலம் ஆட்டம் காட்டிய ட்ரம்ப்
“வெனிசுலா” பொருளாதார நெருக்கடியா? அல்லது புவிசார் அரசியல் போர் மேடையா?
வெனிசுலா நாட்டில் நிலவி வரும் பதற்றமான சூழலை வெறும் பொருளாதார நெருக்கடியாக மட்டுமே பார்க்க முடியாது.
இது அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான நீண்டகால புவிசார் அரசியல் போட்டியின் ஒரு முக்கிய கட்டமாகவே கருதப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் வெனிசுலா ஜனாதிபதியை கைது செய்து, அரசியல் ரீதியாக அந்த நாட்டை பலவீனப்படுத்திய அமெரிக்காவின் நடவடிக்கை, அதன் பின்னணியில் உள்ள ஆழமான அரசியல் நோக்கங்களை மீண்டும் உலகின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
வளமிக்க வெனிசுலா – அமெரிக்காவின் பார்வையில்
வெனிசுலா உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் கையிருப்புகளை கொண்ட நாடுகளில் ஒன்றாகும். இதற்கு கூடுதலாக எரிவாயு, தங்கம், வெள்ளி, அரிய உலோகங்கள் உள்ளிட்ட பல்வேறு கனிம வளங்களும் இந்நாட்டில் அதிகளவில் உள்ளன. இவ்வளவுகளின் மீது அமெரிக்காவின் கண் இருப்பது புதிதல்ல.
ஆனால், இதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம் வெறும் வள கைப்பற்றல் மட்டுமல்ல. லத்தீன் அமெரிக்காவில் சீனா உருவாக்கி வந்த அரசியல், பொருளாதார செல்வாக்கை முறியடிக்கவே அமெரிக்கா இந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ட்ரம்ப் நிர்வாகத்தின் காலகட்டத்தில் இந்த போக்கு மேலும் வெளிப்படையாக செயல்பட்டது.
லத்தீன் அமெரிக்காவில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு
கடந்த இருபது ஆண்டுகளாக சீனா, லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் தனது வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை திட்டமிட்டு விரிவுபடுத்தி வருகிறது.
இன்று தென் அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக சீனா உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான மெக்சிகோவிற்கே சீனா இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக மாறியுள்ளது என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த மாற்றம், லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்காவுக்கு மாற்றாக சீனாவை ஒரு நம்பகமான கூட்டாளியாக பார்க்கத் தொடங்கியுள்ளன என்பதற்கான தெளிவான சான்றாகும்.
சீனாவுக்கு கிடைத்த மூலாதாரங்கள்
பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே போன்ற நாடுகளிலிருந்து சீனா பெருமளவில் சோயாபீன்ஸ் உள்ளிட்ட விவசாயப் பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது.
இது சீனாவின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தியதுடன், அமெரிக்காவுடன் நடந்த வர்த்தகப் போரின்போது பெரிய பாதிப்புகளைத் தவிர்க்க உதவியது.
அதேபோன்று, சிலி, அர்ஜென்டினா, பொலிவியா ஆகிய நாடுகளில் இருந்து கிடைக்கும் லித்தியம் கார்பனேட் போன்ற கனிமங்கள், சீனாவின் வேகமாக வளர்ந்து வரும் மின்சார வாகனத் துறைக்கு அடித்தளமாக உள்ளது.
இந்த கனிமங்களை சீனா சுத்திகரித்து, பேட்டரிகள் மற்றும் பிற உற்பத்திகளாக மாற்றி மீண்டும் லத்தீன் அமெரிக்க சந்தைகளிலேயே விற்பனை செய்து பெரும் லாபத்தை ஈட்டுகிறது.
2023 ஆம் ஆண்டில் மட்டும், சீனாவின் எலக்ட்ரிக் வாகன ஏற்றுமதி லத்தீன் அமெரிக்காவுக்கு 55 சதவீதம் உயர்ந்தது என்பது சீனாவின் பொருளாதார ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது.
ஹுவாவே மற்றும் 5ஜி – மேற்கத்திய தடைகளுக்கான மாற்று சந்தை
மேற்கத்திய நாடுகளில் பல தடைகளை எதிர்கொண்ட ஹுவாவேயின் 5ஜி தொழில்நுட்பத்திற்கு, லத்தீன் அமெரிக்கா ஒரு முக்கிய சந்தையாக மாறியுள்ளது.
பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஹுவாவே 5ஜி ஸ்மார்ட்போன்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள் மற்றும் உபகரணங்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.
இது சீனாவின் தொழில்நுட்ப செல்வாக்கை மேலும் ஆழப்படுத்தியுள்ளது.
கடன், முதலீடு மற்றும் சீனாவின் அரசியல் பிடிப்பு
சீனா, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு கடன் மற்றும் நிதியுதவிகளை ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்தி வந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் மெக்சிகோ, வெனிசுலா, ஈக்வேடார், பிரேசில், பொலிவியா, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளுக்கு பல பில்லியன் டொலர் கடன்களை சீனா வழங்கியுள்ளது.
சிறிய நாடுகளுக்குக் கூட 500 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த கடன்கள் வெறும் பொருளாதார உதவியாக இல்லாமல், சீனாவின் நீண்டகால அரசியல் செல்வாக்கை உறுதிப்படுத்தும் முதலீடுகளாகவே செயல்பட்டு வந்தன.
அமெரிக்காவின் நெருடல் மற்றும் எதிர் நடவடிக்கைகள்
லத்தீன் அமெரிக்கா அமெரிக்காவுக்கு புவியியல் ரீதியாக மிக அருகில் உள்ளது. இப்படியான சூழலில், அந்தப் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பது அமெரிக்காவுக்கு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
இதன் விளைவாக, பல லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்க அழுத்தத்துக்கு இணங்கி சீனாவுடனான உறவுகளை குறைக்க தொடங்கியுள்ளன.
பனாமா, சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோட்’ திட்டத்திலிருந்து விலகியது. பனாமா கால்வாய் தொடர்பான உரிமைகளும் அமெரிக்க நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்கு சென்றுள்ளன.
மெக்சிகோ சீனப் பொருட்களுக்கு கடும் சுங்க வரிகளை விதித்துள்ளது.
வெனிசுலா அரசு வீழ்ச்சி- சீனாவுக்கான எச்சரிக்கை
வெனிசுலாவில் அமெரிக்காவின் தலையீடு வெற்றி பெற்றால், அது சீனாவுக்கு ஒரு முக்கிய அரசியல் எச்சரிக்கையாக அமையும். சீனா வெனிசுலாவை எந்த அளவுக்கு பாதுகாக்க முடிகிறது என்பதை லத்தீன் அமெரிக்க நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில், சீனாவுடன் நெருக்கமாக இருப்பது தங்களுக்கு பாதுகாப்பானதா என்ற கேள்வி பல நாடுகளில் எழலாம். இதன் மூலம் சீனாவின் உலகளாவிய ஆதிக்க கனவு சவாலுக்கு உள்ளாகலாம்.
வெனிசுலா விவகாரம் ஒரு தனிநாட்டு அரசியல் பிரச்சனை அல்ல. இது அமெரிக்கா – சீனா இடையேயான உலகளாவிய அதிகாரப் போட்டியின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்படுகிறது.
கடன், வர்த்தகம், தொழில்நுட்பம் போன்றவை மூலம் உருவாக்கப்பட்ட சீனாவின் செல்வாக்கை, இராணுவம் மற்றும் அரசியல் அழுத்தங்களின் மூலம் அமெரிக்கா முறியடிக்க முயல்கிறது.
இந்தப் போட்டியில், சீனாவுக்கு வெறும் நிதியுதவி மற்றும் கடன் அரசியல் மட்டும் போதுமா, அல்லது அது தனது புவிசார் அரசியல் அணுகுமுறையை மாற்ற வேண்டுமா என்பதே எதிர்கால உலக அரசியலில் முக்கியமான கேள்வியாக எழுகிறது.





