மீண்டும் விஷ்ணு அவதாரத்தில் பிரபாஸ்? அப்போ கமல்ஹாசன் யார்?
 
																																		இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி என நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் படத்துக்கு தற்காலிகமாக ப்ராஜெக்ட் கே என பெயரிடப்பட்டுள்ளது.
சமீபத்தில், இந்த படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பே வெளியானது.
இந்நிலையில், இந்த படத்தில் பிரபாஸின் கதாபாத்திரம் விஷ்ணு பகவானின் ஒரு அவதாரம் என்று பரபரப்பான பேச்சுக்கள் டோலிவுட்டில் வலம் வருகின்றன.

இந்தியா சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த பிரம்மாண்டம் என்றால் அது பிரபாஸ் நடித்த பாகுபலி ஒன்று மற்றும் இரண்டு படங்கள் தான். அதன் பின்னர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகி வரும் படங்கள் எல்லாமே பெரிய பட்ஜெட் படங்களாகவே உருவாகி வருகின்றன. இந்த ஆண்டு வெளியாக உள்ள சலார் படம் வேறலெவலில் ஹாலிவுட் படங்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சலார் படத்தை விட பிரம்மாண்டமாக பல கோடி பட்ஜெட்டில் பிரபாஸின் ப்ராஜெக்ட் கே உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் இந்தியாவின் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். ஹீரோ பிரபாஸுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் என்றும் வில்லனாக நடிக்க கமீட் ஆகி உள்ள உலக நாயகன் கமல்ஹாசனுக்கு வெறும் 20 நாட்கள் நடிக்க 20 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். ஹீரோயின் தீபிகா படுகோனுக்கு 15 கோடி ரூபாயும், மற்றொரு ஹீரோயினான திஷா பதானிக்கு 8 கோடி ரூபாயும் பாலிவுட்டின் மூத்த நடிகர் அமிதாப் பச்சனுக்கு 2 கோடி ரூபாயும் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் வெளியான பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தில் விஷ்ணுவின் அவதாரமான ராம அவதாரத்தில் நடிகர் பிரபாஸ் நடித்திருந்தார். லைவ் ஆக்ஷன் தொழில்நுட்பத்தில் அந்த படம் உருவாகி இருந்தது. ராமாயணத்தையே கொச்சைப் படுத்தி விட்டதாக ஆதிபுருஷ் படத்துக்கு எதிராக ஏகப்பட்ட சர்ச்சைகளும் வெடித்தன. இந்நிலையில், ப்ராஜெக்ட் கே படமும் விஷ்ணுவின் அவதார படம் என்றே ஒரு பேச்சு பலமாக அடிபட்டு வருகிறது.
பிரபாஸின் ப்ராஜெக்ட் கே படத்தின் உண்மையான அர்த்தமே கல்கி பகவானின் அவதாரம் தான் என ஹாட் டாபிக் ஒன்று சினிமா வட்டாரத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. விஷ்ணுவின் 10வது அவதாரமான கல்கி அவதாரம் இன்னமும் வராத நிலையில், அந்த அவதாரத்தை உலகிற்கு கொண்டு வரும் ப்ராஜெக்ட் தான் இந்த ப்ராஜெக்ட் கே படமே என்கின்றனர். இது உண்மையா என்பது அடுத்த ஆண்டு படம் வெளியாகும் போது தெரிந்து விடும்.
 
        



 
                         
                            
