ஈரானில் உக்கிரமடையும் போராட்டம்: கூட்டு தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல், அமெரிக்கா?
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கு எதிராக கடந்த டிசம்பர் 28-ம் திகதி தலைநகர் டெஹ்ரானில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது.
“ஜென் இசட்” இளைஞர்கள் தலைநகரில் திரண்டு மதத் தலைவர் காமேனி, ஜனாதிபதி மசூத் பெசேஸ்கியான் பதவி விலக வலியுறுத்தினர்.
இதனையடுத்து கடந்த இரு வாரங்களில் அரசுக்கு எதிரான போராட்டம் ஈரான் முழுவதும் வியாபித்து பரவி உள்ளது.
இவ்வாறு போராட்டம் வலுவடைந்து வருவதால் படையினர் களமிறக்கப்பட்டு உள்ளனர். பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு வருகிறது.
ஈரான் மூத்த அதிகாரி ஒருவர் சர்வதேச செய்தி நிறுவனத்திடம் கருத்து வெளியிடுகையில்,
“அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈரான் முழுவதும் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்” என்று தெரிவித்தார். அவர் தனது பெயரை வெளியிடவில்லை.
அமெரிக்காவும், இஸ்ரேலும் சதி செய்வதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதற்கிடையில் போராட்டக்காரர்களை பாதுகாக்க அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான்மீது கூட்டு தாக்குதலை நடத்தக்கூடும் என தெரியவருகின்றது.
தாங்கள் போரை விரும்பவில்லை எனவும், எவரேனும் போர் தொடுத்தால் பதிலடிக்கு தயார் என ஈரான் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





