பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் ஈரானியர்கள்!
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஈரானியர்களை ஏற்றிச் செல்லும் இரண்டாவது விமானம் இன்று அமெரிக்காவை விட்டு வெளியேறியுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வொஷிங்டனில் இருந்து நூற்றுக்கணக்கான கைதிகள் ஈரானுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டக் காரணங்கள் மற்றும் குடியேற்ற விதிமுறைகளை மீறியதால் ஈரானியர்கள் திருப்பி அனுப்பப்படவுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏறக்குறைய 55 ஈரானியர்கள் நாடுகடத்தப்பட்டதை ஈரானிய வெளியுறவு அமைச்சக அதிகாரி மொஜ்தபா சாஸ்தி கரிமி (Mojtaba Shasti Karimi) உறுதிப்படுத்தியுள்ளார்.
தெஹ்ரானின் (Tehran) அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்களை முன்னெடுத்ததை தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன. இந்நிலையிலேயே நாடுகடத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் உள்ள ஆர்வலர்களும் ஈரானுக்கு நாடுகடத்தப்பட்டவர்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். ஈரானில் அவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




