IPL Match 52 – பெங்களூரு அணிக்கு 148 ஓட்டங்கள் இலக்கு
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் ஆர்சிபி- குஜராத் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி குஜராத் அணியின் சகா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்திலேயே குஜராத் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
முதல் ஓவரின் 3-வது பந்தில் சகா 7 பந்துகள் சந்தித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து சாய் சுதர்சன் களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய சுப்மன் கில் 7 பந்தில் 2 ரன் எடுத்த நிலையில் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அதேவேளையில் சுதர்சன் 14 பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனால் 19 ரன்கள் எடுப்பதற்குள் குஜராத் 3-விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
4-வது விக்கெட்டுக்கு ஷாருக் கான் உடன் மில்லர் ஜோடி சேர்ந்தார். குஜராத் டைட்டன்ஸ் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 23 ரன்களே அடித்தது.
பின்னர் ஷாருக் கான்- மில்லர் ஜோடி மெல்ல மெல்லி சரிவில் இருந்து மீண்டது. 9 ஓவரில் 49 ரன்னைத் தொட்ட நிலையில், 10-வது ஓவரில் 12 ரன்கள் கிடைத்தன.
மில்லர் 20 பந்தில் 30 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷாருக்கான் 24 பந்தில் 37 ரன்கள் எடுத்த நிலையிலும் வெளியேறினர். இதனால் மீண்டும் ஸ்கோரில் தொய்வு ஏற்பட்டது.
குஜராத் அணி 14.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டெவாட்டியா, ரஷித் கான் அதிரடியில் இறங்கினர். இருந்தபோதிலும் 18-வது ஓவரில் ரஷித் கான் ஆட்டமிழந்தார்.
இதே ஓவரில் டெவாட்டியா 21 பந்தில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் 18 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் அடித்திருந்தது.
கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை இழக்க குஜராத் டைட்டன்ஸ் 147 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஆர்சிபி அணி சார்பில் முகமது சிராஜ், யாஷ் தயாள், விஜயகுமார் வைசாக் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.