ஹெரோயினுடன் சிக்கிய அதிபரிடம் பலகோணங்களில் விசாரணை!
ஹெரொயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட அரச பாடசாலையொன்றின் அதிபருக்கு, டுபாயில் இருந்தே குறித்த போதைப்பொருள் அனுப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
எப்பாவல பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் அதிபர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றார் என பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கமைய குறித்த அதிபருக்கு சொந்தமான எப்பாவல பகுதியிலுள்ள ஹோட்டலொன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டது.
இதன்போது இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபரான அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரின் மனைவி, தேசிய மக்கள் சக்தியின் பெலியகொடை பிரதேச சபை உறுப்பினரெனவும் தெரியவந்துள்ளது. பெலியகொடை பகுதியிலுள்ள அவர்களது வீடும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள அதிபரிடம், அநுராதபுரம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
தமது உறவினர் ஒருவரின் மகன் ஒருவரே டுபாயில் இருந்து போதைப்பொருளை அனுப்பி வைத்துள்ளார் என அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இவருக்கு போதைப்பொருள் வியாபார வலைப்பின்னலுடன் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.




