சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினம் இன்று : ஆண்டுதோறும் 400,000 குழந்தைகள் பாதிப்பு!

சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்படுகிறது.
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400,000 புதிய குழந்தைப் பருவப் புற்றுநோய்கள் கண்டறியப்படுகின்றன.
தேசிய புற்றுநோய் பதிவேட்டின்படி, 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் 1032 குழந்தை பருவ புற்றுநோய் வழக்குகள் பதிவாகியுள்ளன. இவர்களில் 578 சிறுவர்களும் 454 சிறுமிகளும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பதிவாளர் ஜெனரல் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2019 ஆம் ஆண்டில் குழந்தை பருவ புற்றுநோயால் ஏற்பட்ட மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 224 என அறிவிக்கப்பட்டுள்ளது.
லுகேமியா (இரத்த புற்றுநோய்), லிம்போமா (நிணநீர் கணுக்களின் புற்றுநோய்), மூளை புற்றுநோய் மற்றும் எலும்பு புற்றுநோய் ஆகியவை குழந்தைகளிடையே பொதுவாகப் பதிவாகும் புற்றுநோய் வகைகளாகும்.
குழந்தைப் பருவப் புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளில் அதிக எண்ணிக்கையானது லுகேமியா மற்றும் மூளைப் புற்றுநோயால் ஏற்படுகிறது.
இந்த ஆண்டு குழந்தைப் பருவ புற்றுநோய் தினத்திற்கான கருப்பொருள் “உற்சாகத்துடன் செயல்படுவோம்” என்பதாகும்.
இது குழந்தை புற்றுநோய் பராமரிப்பின் சவால்களை சமாளிக்க கூட்டு முயற்சிகள் மற்றும் முன்முயற்சிகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
குழந்தைப் பருவப் புற்றுநோய்கள் பொதுவாகக் காணப்படுவதில்லை, மேலும் பெரும்பாலான குழந்தைப் பருவப் புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியும்.