இளையராஜாக்கு பாரத ரத்னா விருது??

தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகத்திலும் பல மொழிகளில் இசையமைத்து மக்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. சமீபத்தில் லண்டன் சென்று சிம்பொனி இசையமைத்து இசையுலகை திரும்பிப் பார்க்க வைத்தார்.
அவரது சாதனையை பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்கள், திரையுலகினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். சில தினங்களுக்கு முன்பு டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார் இளையராஜா.
அவருக்கு இந்திய அரசின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்க பரிசீலனையில் உள்ளதாக டில்லி அரசியல் வட்டாரங்களில் பரவியுள்ளதாகத் தகவல். தற்போது பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருக்கிறார் இளையராஜா.
அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வர உள்ள நிலையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கினால், தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடிக்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது.
இளையராஜா பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை ஏற்கெனவே பெற்றுள்ளார். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென பல வருடங்களாகவே ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தமிழகத்தில் சினிமா துறையிலும் தொடர்புடையவர்களில் இதுவரையில் எம்ஜிஆர், எம்எஸ் சுப்புலட்சுமி, ஆகியோர் பாரத ரத்னா விருது பெற்றுள்ளனர்.