இந்தியா – மணிப்பூரில் பாரிய அளவில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான பெரிய அளவிலான நடவடிக்கைகள் புதன்கிழமை (27) தொடங்கியதாக அம்மாநில முதலமைச்சர் என்.பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாகச் செயல்படும் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார். பயங்கரவாத குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த முடிவெடுக்கப்பட்டிருந்தது.
ஜிபிராம் பகுதியில் அந்நடவடிக்கைகள் தொடங்கின. மணிப்பூரைப் பாதித்திருக்கும் ஆக அண்மைய வன்முறைச் சம்பவங்கள் அப்பகுதியில்தான் முதலில் வெடித்தது.
ஜிபிராமில் தொடங்கிய நடவடிக்கைகள், தவறு இழைத்தவர்கள் சட்ட ரீதியாகக் கையாளப்படும் வரை மற்ற பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் என்று திரு சிங் குறிப்பிட்டார். பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் குக்கி இனத்தவர் உள்ள பகுதிகளில் மட்டும் மேற்கொள்ளப்படாது என்றும் சட்டவிரோதமாக ஆயுதங்களைப் பெற்ற அனைவர் மீதும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சொன்னார்.
“ஜிபிராமில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. அதேவேளை, மாநிலம் முழுவதும் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் இருக்கும் எல்லா இடங்களிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்று சிங், இம்பால் நகரில் செய்தியாளர்களிடம் கூறினார்.
மக்களுக்கு மறுவுறுதி அளிக்கும் நோக்கில் கூடுதல் படைகளை அனுப்புமாறு முணிப்பூர் அரசாங்கம், மத்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இம்மாத இறுதிக்குள் அம்மாநிலத்தில் 288 மத்தியப் படைகள் இருக்கும்.
மணிப்பூரில் இம்மாதத் தொடக்கத்தில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த அறுவர் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் பெண்கள் மற்றும் சிறுவர்கள்.அச்சம்பவத்தைத் தொடர்ந்து மணிப்பூரில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.
கொல்லப்பட்டவர்களில் எட்டு மாதக் குழந்தையும் அடங்கும். அவர்கள் அனைவரும் ஜிபிராமின் பொரோபெக்ரா பகுதியில் உள்ள நிவாரண முகாமில் வசித்து வந்தனர்.குக்கி, மெய்தி சமூகத்தினரிடையே சென்ற ஆண்டு மே மாதம் வெடித்த வன்முறையில் அவர்கள் தங்கள் வீடுகளை இழந்தனர்.