ரஷ்ய ராணுவத்தில் பணிபுரியும் இந்தியர்களுக்கு மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்!
ரஷ்ய ராணுவத்தில் பணிபுரியும் இந்தியர்களை மீட்கும் வரை போரிலிருந்து விலகி இருக்குமாறு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2022 பிப்ரவரி 24ம் திகதி போர் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளாகியும் இரு நாடுகளிடையே போர் இன்னும் நீடிக்கிறது. இருநாட்டு ராணுவத்திலும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் ரஷ்ய ராணுவத்தில் பணிபுரியும் இந்தியர்களை பத்திரமாக தாயகத்துக்கு அழைத்து வர வேண்டும் என இந்திய அரசுக்கு கோரிக்கைகள் சென்றன. குறிப்பாக உத்தரப் பிரதேசம், குஜராத், பஞ்சாப், ஜம்மு – காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உக்ரைனுடன் போரிட்டு வரும் இவர்களை மீட்பது தொடர்பாக ரஷ்ய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: “இந்தியர்கள் சிலர் ரஷ்ய ராணுவத்தில் ஆதரவு வேலை செய்து வருவதை நாங்கள் அறிந்துள்ளோம். அவர்களை தாயகத்துக்கு அழைத்து வருவது தொடர்பாக மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம், ரஷ்ய அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளது. உக்ரைனுடனான போரில் இருந்து விலகி இருக்கவும், உரிய எச்சரிக்கையுடன் இருக்கவும் ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்திய பிரஜைகளை கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு அவர் கூறினார்.