பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்பு சட்டபூர்வமானது அல்ல: எதிர்க்கட்சி எம்.பி.க்கள்
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் சேவை நீடிப்புக்கு அரசியலமைப்புச் சபையின் அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவே அவரது சேவை நீடிப்பு சட்டபூர்வமானது அல்ல என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கேள்வியொன்றை எழுப்பிய போது, ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்புக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கவில்லை எனவும் அவரது பதவி நீடிப்பு சட்டபூர்வமானதா எனவும் கேள்வி எழுப்பினார்.
நாட்டில் சட்டரீதியாக நியமிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் எவரும் இல்லை எனவும் இது பாரதூரமான விடயம் எனவும் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கு அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அது சட்டப்பூர்வமானது எனவும், அரசியலமைப்பு பேரவை அதற்கு அங்கீகாரம் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்புக்கு இரண்டு தடவைகள் அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், மூன்றாவது பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்புக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும், புதிய பொலிஸ் மா அதிபரை நியமிப்பது பொருத்தமானது என தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டில் பொலிஸ் மா அதிபர் இல்லை எனவும், இது பாரதூரமான பிரச்சினை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.