திஸ்ஸ விகாரையை அகற்ற முற்பட்டால் நடப்பது வேறு: மஹிந்த அணி எச்சரிக்கை!
திஸ்ஸ விகாரைக்கு அழுத்தம் கொடுத்து அதனை அகற்றுவதற்கு முற்பட்டால் அதற்கு எதிராக எழுந்து நிற்கவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“யாழ்ப்பாணத்தில் இராணுவ வசம் இருந்த காணியில் 98 சதவீதம் விடுவிக்கப்பட்டுவிட்டது. எனவே, திஸ்ஸ விகாரை தொடர்பில் அநீதியான தகவல்களை பரப்ப முற்படக்கூடாது.
சிங்கள, பௌத்த மக்கள் ஒருபோதும் கோவில்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியது கிடையாது. கோவிலுக்கு சென்று வழிபட்டு, மரியாதை செலுத்துவார்களே தவிர அதற்கு அப்பால் ஒன்றும் செய்யமாட்டார்கள்.
எனவே, கொழும்பிலுள்ள புத்தியுடைய தமிழ் மக்களும் தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்கு எதிராக நடக்கும் அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்.
அதேவேளை, தமிழர் தாயகத்தில் விகாரை கட்ட முடியாது என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிடுகின்றது. இது தொடர்பில் இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு என்ன?
வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த மரபுரிமைகளை நாசமாக்கும் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் இராணுவத்தினர் பாதுகாத்தனர். தற்போது இராணுவத்தின் செயல்பாடு தடுக்கப்பட்டுள்ளது. இது தவறான நடவடிக்கையாகும்.
பௌத்த மரபுரிமைகளை அழிப்பது தவறான நடவடிக்கையாகும். இதற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திஸ்ஸ விகாரை விடத்தில் அழுத்தம் கொடுத்து தேரர்களை வெளியேற்றி, விகாரையை அகற்ற முற்பட்டால் ஒரு இனமாக நாம் எழுந்து நிற்கவேண்டும்.” – என்றார் சரத் வீரசேகர .





