‘அபோகாலிப்டிக் பேரழிவை’ எதிர்கொண்டதற்காக ஹங்கேரிய நாவலாசிரியருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியரும், திரைக்கதை ஆசிரியருமான லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. முதல் நோபல் பரிசுகள் 1901 ஆம் ஆண்டு வழங்கப்பட்டன. அமைதிக்கான பரிசு நார்வே நாட்டின் ஓஸ்லோவிலும், மற்ற பரிசுகள் ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமிலும் ஆல்ஃபிரெட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10 அன்று வழங்கப்படுகின்றன.
வியாழக்கிழமை ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடந்த ஒரு விழாவில் பரிசை அறிவித்த நோபல் விருத்துக் குழு, அவரின் இந்த வெற்றி, ‘ கவர்ச்சிகரமான மற்றும் சிறந்த படைப்புகளுக்காக’ அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ‘அப்போகாலிப்டிக் பேரழிவின் நடுவிலும், கலையின் சக்தியை மீண்டும் உறுதிப்படுத்துவதாக’ அவரது எழுத்துக்கள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விருது அறிவிக்கப்படுவதற்கு முன், பட்டியலில் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை 6/1 என்ற விகிதத்துடன் இரண்டாவது இடத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஜெரால்ட் முர்னேன் 5/1 என்ற விகிதத்துடன் பட்டியலில் முன்னணியில் இருந்தார். மெக்சிகோவைச் சேர்ந்த கிறிஸ்டினா ரிவேரா கார்சா, ஜப்பானின் ஹருகி முரகாமி, ருமேனியாவின் மிர்சியா கார்டரேஸ்கு, அமெரிக்காவின் தாமஸ் பிஞ்சன் மற்றும் சீனாவின் கேன் ஸ்யூ உள்ளிட்டோர் இதரப் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இருப்பினும், பந்தயக்காரர்களின் கணிப்புகள் பெரும்பாலும் நோபல் அகாடமியின் முடிவுகளுடன் பொருந்துவதில்லை.
124 ஆண்டுகால நோபல் பரிசு வரலாற்றில், இதுவரை 18 பெண்கள் மட்டுமே இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளனர். லியோ டால்ஸ்டாய், வர்ஜீனியா வூல்ஃப், ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்ற சில சிறந்த எழுத்தாளர்களுக்கு ஒருபோதும் நோபல் பரிசு வழங்கப்படவில்லை. மேலும், ஜீன்-பால் சார்த்தர் மற்றும் போரிஸ் பாஸ்டர்னாக் போன்ற சிலர் இந்த விருதைத் தங்கள் விருப்பத்தின் பேரில் நிராகரித்தனர் அல்லது நிராகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை அவர்களின் இந்த கௌரவம், ஹங்கேரிய இலக்கியத்துக்கும், உலக இலக்கிய உலகிற்கும் பெருமை சேர்க்கும் ஒரு நிகழ்வாகும்.