குயின்ஸ்லாந்தில் கொட்டித்தீர்த்த கனமழை;ஆயிரக்கணக்கானோரை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வலியுறுத்தல்
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் மிக அதிகமான மழைப்பொழிவு காரணமாக பெருவெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், நகரின் புறநகர் பகுதிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும், விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும் கெய்ர்ன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 600 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்துள்ளது, மேலும் 500 மி.மீ மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இதனிடையே, அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை நீர்மட்டம் 1970 களில் இருந்த சாதனைகளை விட அதிகமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
குயின்ஸ்லாந்து மாகாண முதல்வர் ஸ்டீவன் மைல்ஸ் தெரிவிக்கையில், நிலைமை மிகவும் தீவிரமாகவும் இன்னும் மோசமாக வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளார். அத்துடன் 10,500 பேர்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கெய்ர்ன்ஸ் நகர உள்ளூர் பேரிடர் மேலாண்மை குழு தெரிவிக்கையில், குடியிருப்புகள், கட்டிடங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், பல பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதுவரை இறப்புகள் அல்லது காணாமல் போனவர்கள் குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், ஆனால் சனிக்கிழமையன்று கெய்ர்ன்ஸில் மின்னல் தாக்கியதில் 10 வயது சிறுமி ஆபத்தான நிலையில் உள்ளார் என்றும் கூறப்படுகிறது.இதனிடையே, கெய்ர்ன்ஸ் நகரிலிருந்து வடக்கே 120 கிமீ தொலைவில் உள்ள Daintree கிராமத்தில் சனிக்கிழமை காலை முதல் 350 மிமீ மழை பெய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
கிழக்கு அவுஸ்திரேலியா சமீபத்திய ஆண்டுகளில் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. மட்டுமின்றி அவுஸ்திரேலியா தற்போது El Nino வானிலை நிகழ்வை எதிர்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.