காசாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை : பாலஸ்தீனிய மக்களின் நிலை குறித்து கவலை!
காசாவில் கொட்டித் தீர்த்த கனமழைக் காரணமாக ஏற்கனவே மோசமடைந்திருந்த பாலஸ்தீனிய மக்களின் வாழ்க்கை முறை மேலும் மோசமடைந்துள்ளதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது.
நேற்று இரவு முழுவதும் மழை மிகவும் தீவிரமாக இருந்ததால், தனது அலுவலகத்திற்கு அருகில் தரையில் 15 செ.மீ (6 அங்குலம்) வரை தண்ணீர் தேங்கியிருப்பதைக் கண்டதாக யுனிசெஃப் செய்தித் தொடர்பாளர் ஜோனாதன் கிரிக்ஸ் (Jonathan Crickx) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஈரமான ஆடைகளில் கூடாரங்கள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களில் வசிக்கும் குழந்தைகள் தாழ்வெப்பநிலை மற்றும் பிற நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காசாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம், தாழ்வெப்பநிலையால் குழந்தையொன்று இறந்துள்ளதாக அறிவித்துள்ளது. அத்துடன் கடுமையான வானிலையால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி குறைந்தது 11 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
காசா போர்நிறுத்தம் தொடங்கியதிலிருந்து கூடாரங்கள், போர்வைகள் மற்றும் துணிகளை வழங்குவதை ஐ.நா. அமைப்புகள் முடுக்கிவிட்டுள்ளன. ஆனால் இன்னும் போதுமான உதவி கிடைக்கப்பெறவில்லை என பாலஸ்தீனிய மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை கிட்டத்தட்ட 55,000 குடும்பங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் உடமைகள் மற்றும் தங்குமிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அல்லது அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் மாத்திரம் 40 முகாம்கள் வெள்ளத்தில் மூழ்கியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீரற்ற வானிலை அவர்களின் வாழ்க்கை முறையை மேலும் மோசமாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





