விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: ஜனநாயகன் குறித்து அதிரடி தீர்ப்பு!
ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகன் கருதப்படுகின்றது.
இதனால் குறித்த படம் தொடர்பில் விஜய் ரசிகர்கள் வழிமீது விழிவைத்து காத்துள்ளனர்.
தைப் பொங்கலை முன்னிட்டு குறித்த படம் இன்று (9) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை குழு மறுப்பு தெரிவித்தது.
அத்துடன், ஜனநாயகன் படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திரைப்படத்தை தயாரித்துள்ள கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார்.
இதன்போது பாதுகாப்பு படை தொடர்பான சின்னங்கள் இடம் பெற்றுள்ளதால், அதுகுறித்து ஆய்வு செய்ய பாதுகாப்பு துறை நிபுணர்களை நியமிக்க வேண்டியதுள்ளது.
தணிக்கை சான்று வழங்கும் வரை இதுபோல வழக்கு தொடர முடியாது என்று தணிக்கை வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை முன்வைத்தது.
இரு தரப்பு வாதங்களை ஆராய்ந்த பின்னர் நீதிபதி பி.டி ஆஷா தனது தீர்ப்பை வழங்கினார்.
“ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தில் அதிகார வரம்பை தணிக்குழு குழு தலைவர் மீறியுள்ளார். தணிக்கை குழு பரிந்துரைத்த திருத்தங்களை ஜனநாயகன் படக்குழு மேற்கொள்ள வேண்டும்.
ஜனநாயகனுக்கு எதிரான முறைப்பாடு ஆபத்தானது.
இதுபோன்ற முறைப்பாடுகளை ஊக்கப்படுத்த முடியாது. ஆவணங்களை ஆய்வு செய்த போது குற்றச்சாட்டு பிற்போக்குத்தனமானது என்பது தெரிகிறது.
தணிக்கை குழுவில் உறுப்பினராக உள்ளவர் அளித்த முறைப்பாட்டை ஏற்க முடியாது. எனவே ஜனநாயகன் திரைப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்கிறேன். படத்திற்கு உடனடியாக UA சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.” – என்றார் நீதிபதி.





