சிம்பு – கௌதம் மேனனுக்கு இடையில் மோதல்??
இயக்குநர் கௌதம் மேனனுக்கும், சிம்புவுக்கும் இடையே பிரச்சினை எதனால் வந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
கோலிவுட்டின் முன்னணி நடிகரான சிம்பு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தைத் தொடர்ந்து எழுந்த பிரச்னைகள், தனிப்பட்ட முறையில் சுற்றிய பிரச்னைகள் என பல காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
மேலும் அந்த சமயத்தில் அவரது உடல் எடையும் கூடி பார்ப்பதற்கு வேறு மாதிரியாக இருந்தார்.
இதையடுத்து, உடல் எடையை குறைத்து தனது எண்ணங்களை ஒருமுகப்படுத்தி மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார் சிம்பு. இரண்டாவது இன்னிங்ஸில் ஈஸ்வரன் கைகொடுக்கவில்லை என்றாலும் சிம்புவின் மாநாடுக்கு கூட்டம் அலைமோதியது.
அதன் காரணமாக படமும் நூறு கோடி ரூபாயை வசூலித்து மாஸ் காட்டியது செய்தது. எனவே விண்டேஜ் சிம்பு மீண்டும் வந்துவிட்டார் என எஸ்டிஆர் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.
அதேபோல் மாநாடுக்கு பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருந்தார். கிராமத்து இளைஞர், மும்பையில் வேலை பார்க்கும் இளைஞர் என முத்து என்ற கதாபாத்திரத்தில் கலக்கியிருந்தார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க சிம்புவின் கிராஃப் உச்சத்துக்கு சென்றது.
எனவே இனி சிம்புவுக்கு சறுக்கலே கிடையாது என்ற நம்பிக்கை பலமாக பிறந்தது ரசிகர்களுக்கு. இப்படி ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த சிம்புவுக்கு பத்து தல சின்ன சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது.
இந்த சறுக்கலை அடுத்தப் படத்தில் சரி செய்துவிடுவார் என அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள்.
பத்து தல படத்தை முடித்த சிலம்பரசன் அடுத்ததாக கமல் ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இது அவரது கரியரில் ரொம்பவே முக்கியமான படமாக அமையும் என கருதப்படுகிறது.
அதேசமயம் வெந்து தணிந்தது காடு 2 படம் மற்றும் கொரோனா குமார் ஆகிய படங்களுக்காக வேல்ஸ் நிறுவனத்திடம் போடப்பட்ட ஒப்பந்தத்தை சிம்பு மீறிவிட்டார் என புதிய சர்ச்சை எழுந்திருக்கிறது.
சிம்புவுடன் தொடர்ந்து பலகட்ட பேச்சுவார்த்தைகளை ஐசரி கணேஷ் நடத்தியும் சுமூக முடிவு எட்டப்படாததால் அவர் மீது கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சிம்புவிடம் உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
சிம்பு திருப்திகரமான விளக்கத்தை அளிக்கவில்லை என்றால் அவருக்கு ரெட் கார்ட் விதிக்கப்படும் சூழல் உருவாகியிருக்கிறது.
மீண்டும் ரெட் கார்ட் சிக்கலில் சிக்க விரும்பாத சிம்பு ஐசரி கணேஷ் படத்தை முடித்துக்கொடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் கணேஷ் அனுப்பிய இயக்குநர்கள் லிஸ்ட் சிம்புவுக்கு திருப்தி தராததால் கௌதம் மேனனையே ஃபிக்ஸ் செய்ய அவர் சொல்லிவிட்டார் என்று கூறப்படுகிறது. அதேசமயம் கௌதம் மேனனுக்கும், சிம்புவுக்கும் ஒரு உரசல் ஓடிக்கொண்டிருப்பதாக அண்மைக்காலமாக கோலிவுட்டில் தகவல் ஒன்று பறந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் கௌதம் மேனனுக்கும் சிம்புவுக்கும் என்ன பிரச்னை என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
அதன்படி, வெந்து தணிந்தது காடு படத்தின் க்ளைமேக்ஸில் மூன்று சண்டைக் காட்சிகளை எடுப்பேன் என சிம்புவிடம் கௌதம் உறுதி அளித்ததாகவும் ஆனால் ஷூட்டிங்கில் அந்த சண்டைக் காட்சியை அவர் எடுக்கவில்லை.
அதனால்தான் சிம்புவுக்கும், கௌதம் மேனனுக்கும் முட்டிக்கொண்டதாக இப்போது புதிய தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே கமல் ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிப்பதற்கு சிம்பு கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.