மௌனத்தால் அதிரும் திரை! விஜய் சேதுபதி – அரவிந்த் சாமியின் ‘காந்தி டாக்ஸ்’ டிரெய்லர்!
இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘காந்தி டோக்ஸ்’ (Gandhi Talks) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் நேற்று (ஜனவரி 27) வெளியானது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடித்துள்ள இந்தப் படம், வசனங்களே இல்லாத ஒரு ‘ப்ளாக் கொமடி’ (Black Comedy) மௌனப் படமாக உருவாகியுள்ளது.

நேற்று வெளியான சுமார் 2 நிமிடம் 30 விநாடிகள் ஓடும் இந்த டிரெய்லர், படத்தில் இருக்கும் இரண்டு மாறுபட்ட மனிதர்களின் உலகத்தைக் காட்டுகிறது.
ஏழ்மையின் பிடியில் சிக்கி, தனது தாயுடன் போராடும் ஒரு சாமானிய மனிதனாக விஜய் சேதுபதி (மஹாதேவ்) நடித்துள்ளார்.

மறுபுறம், அதிகாரமும் செல்வமும் மிக்க ஒரு கட்டுமானத் தொழிலதிபராக அரவிந்த் சாமி (போஸ்மேன்) மிரட்டலான தோற்றத்தில் வருகிறார்.
பணம் எப்படி ஒரு மனிதனின் அறத்தை மாற்றுகிறது என்பதையும், காந்தியின் கொள்கைகளுக்கும் இன்றைய காலத்து பேராசைக்கும் இடையிலான மோதலையும் நகைச்சுவை கலந்த பரபரப்புடன் இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் காட்சிப்படுத்தியுள்ளார்.

வசனங்கள் இல்லாத ஒரு படத்திற்கு இசையே உயிர்நாடி. அந்தப் பொறுப்பை ஏற்றுள்ள இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், காட்சிகளின் தீவிரத்தை தனது பின்னணி இசையின் மூலம் கடத்தியுள்ளார். டிரெய்லரைப் பார்த்த ரசிகர்கள், “வசனங்களே தேவையில்லை, ரஹ்மானின் இசை எல்லாவற்றையும் பேசிவிட்டது” எனச் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
விஜய் சேதுபதி, அரவிந்த் சாமியுடன் இணைந்து அதிதி ராவ் ஹைதரி நாயகியாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் மராத்தி நடிகர் சித்தார்த் ஜாதவ் நடித்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் (Zee Studios) இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

உலக சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படும் இந்தப் படம், வரும் ஜனவரி 30, 2026 அன்று (மகாத்மா காந்தியின் நினைவு நாள்) திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.





