கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இனவாத பரம்பரையில் வந்தவர்!!!! உதய கம்மன்பில
கொழும்பில் அமைந்துள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு முன்பாக போராட்டம் நடத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குருந்தூர்மலை தமிழர்கள் கடந்த பொங்கல் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
உதயகம்மன்பில உள்ளிட்ட சிங்கள தேசியவாதக் குழுக்கள் அதனைத் தடுக்க முற்பட்ட போதிலும் அவை அனுமதிக்கப்படவில்லை. இந்தப் பின்னணியிலேயே உதய கம்மன்பில இவ்வாறானதொரு கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த பூஜைக்கு எந்த தரப்பினரும் இடையூறு செய்யக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நீதிமன்ற உத்தரவை பெற்றுக் கொண்டதன் காரணமாக 18ஆம் திகதி குருந்தூர்மலை பகுதிக்கு தானும் தனது குழுவினரும் செல்லவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இனவாத பரம்பரையில் வந்தவர் என பிவித்துரு ஹெல உறுமிய தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
குருந்தூர்மலையில் பௌத்த விகாரை ஒன்று அமைந்துள்ளதாகவும் அதற்கு தேவையான பல சான்றுகள் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், சிவன் கோவில் இருந்தமைக்கான ஆதாரம் இல்லை என்றார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பௌத்த பாரம்பரியம் சேதமடைய நேரிடும் என்றும் கம்மன்பில வலியுறுத்தினார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் வாழ்ந்து வரும் நிலையில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை பரப்பும் வகையில் செயற்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
எம்.ஏ.சுமந்திரன், சி.வி.விக்னேஸ்வரன் உட்பட கொழும்பு பிரதேசங்களில் வாழும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் அவ்வாறே செயற்படுகின்றனர்.
எவ்வாறாயினும், தனது அரசியல் இலாபங்களுக்காக மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாக உதயகம்மன்பில மேலும் தெரிவித்தார்.