மூளை முதல் இதயம் வரை… தினமும் ஒரு கைப்பிடி வேர்கடலை போதும்

வேர்க்கடலையில், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த தேவையான, புரத சத்து, வைட்டமின் ஈ, ஆரோக்கிய கொழுப்புகள், வைட்டமின் பி, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.
மலிவான விலையில், கிடைக்கும் வேர்கடலை ஏழைகளின் பாதாம் என அழைக்கப்படுகிறது. நிலக்கடலையில் உள்ள சத்துக்கள் விலையுயர்ந்த உலர் பழங்களுக்கு இணையாக அல்ல… அதை விட அதிகமாக உள்ளது எனலாம்.
வேர்க்கடலை ஒரு நல்ல சிற்றுண்டி. மாலை அல்லது காலையில் எந்த நேரத்திலும் சாப்பிடலாம். வறுத்த வேர்க்கடலை பலர் விரும்பி சாப்பிடுகிறார்கள். அவற்றை வேகவைத்தும் சாப்பிடலாம். இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலை உணவில் வேர்க்கடலையை சேர்த்துக்கொள்ளலாம். வேர்க்கடலை பல வகை உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. வேர்கடலை உருண்டை, வேர்கடலை சட்னி, தாளிப்புகள் என பல வகையில் பயன்படுத்தப்படுகிறது.
வேர்க்கடலையில் புரதம், ஆரோக்கியமான கொழுப்பு, வைட்டமின் ஈ மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்
தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புத உணவு
வேர்க்கடலை சாப்பிடுவதால் டிரிப்டோபன் மற்றும் செரோடோனின் அளவு அதிகரிக்கிறது, இது மனச்சோர்வைக் குறைக்க உதவுகிறது. எனவே, மனநல பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வேர்க்கடலையை சாப்பிட வேண்டும். மூளை ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்த உணவாக வேர்கடலை இருக்கும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு
தினமும் 1 கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வேர்க்கடலையில் மோனோ-அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன, இது LDL என்னும் கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது மற்றும் HDL என்னும் நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
கண்பார்வையை மேம்படுத்தும் மருந்து
பார்வை பலவீனமாக உள்ளவர்கள் தினமும் 1 கைப்பிடி வேர்க்கடலையை தினமும் உட்கொள்ள வேண்டும். வேர்க்கடலை சாப்பிடுவதால் பலவீனமான கண்பார்வை கூட கூர்மையாகிறது. வேர்க்கடலையில் துத்தநாகம் உள்ளது, இது உடலில் வைட்டமின் ஏ உற்பத்தி செய்ய உதவுகிறது. இது கண் ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கிய சத்து
எலும்புகளை வஜ்ரம் போல் வலுவாக்கும் உணவு
வேர்க்கடலையை தினமும் சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் வலுவடையும். வேர்க்கடலையில் மாங்கனீஸ் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எலும்புகளை வலுப்படுத்துகிறது. ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகள் நிறைந்த வேர்க்கடலை, உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது. இதனால் மூட்டு வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்
உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த உணவு
தினமும் வேர்க்கடலை சாப்பிடுவது உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. சைவ உணவு உண்பவர்களுக்கு வேர்க்கடலை புரதத்தின் நல்ல மூலமாகும். இதன் காரணமாக உங்கள் தசைகள் வலுவடைவதோடு எடை இழப்பும் எளிதாகிறது. ஒரு பிடி வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு உங்கள் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும்.