ஐரோப்பாவில் மேலும் 4,000 வேலைகளைக் குறைக்கும் ஃபோர்ட் நிறுவனம்
ஐரோப்பாவில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் எரிசக்தி வாகனத்தைத் தவிர்த்து மின் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். இந்த மாற்றத்தால் ஃபோர்ட் நிறுவனம் போன்று எரிசக்தி வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தங்கள் நிதி நிலைமையைச் சரிசெய்யும் பொருட்டு அவ்வட்டாரத்தில் மேலும் 4,000 வேலைகளை நீக்க ஃபோர்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த எண்ணிக்கை ஐரோப்பிய வட்டாரத்தில் அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் கிட்டத்தட்ட 14 சதவீதமாகும். ஆட்குறைப்பு செய்வது குறித்து அரசாங்கங்களுடனும் தொழிற்சங்கங்களுடனும் ஃபோர்ட் நிறுவனம் ஆலோசனை நடத்தி வருவதாகச் சொல்லப்பட்டது.
2027 ஆம் ஆண்டின் இறுதியில் ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய இரு நாடுகளில் இருக்கும் அந்நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலையின் செயல்பாடு ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஜெர்மனின் வட மேற்கு மாநிலத்தில் உள்ள கொலோன் நகரத்தில் உள்ள அதன் வாகன உற்பத்தி ஆலையில் ‘எக்ஸ்ப்ளோரர்’, ‘கேப்ரி EV’ ஆகிய வாகனங்களின் உற்பத்தியைக் குறைப்பதாக வியாழக்கிழமையன்று (நவம்பர் 21) ஃபோர்ட் நிறுவனம் அறிவித்தது.