ஆழ்ந்த உறக்கத்துக்கு அவசியமான உணவுகள்!
மனிதனுக்கு தினமும் போதுமான உறக்கம் தேவை. உடல் ஆரோக்கியமாக இயங்குவதற்கும், மூளையின் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் நல்ல தூக்கம் அவசியம். மெலடோனின் என்பது இயற்கையாக நமது உடலில் சுரக்கும் ஒரு சுரப்பி ஆகும். இது உறக்கத்தைத் தூண்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இரவில் சரியாகத் தூக்கம் வராமல் சிரமப்படுவோர், மெலடோனின் சுரப்பை அதிகரிக்கச்செய்யும் சில உணவு வகைகளை எடுத்துக்கொண்டால் அவர்கள் நிம்மதியாக உறங்க முடியும். இனி, மெலடோனின் சுரப்பை தூண்டச் செய்யும் சில உணவு வகைகளை இந்தப் பதிவில் காண்போம்.
1. வாழைப்பழங்கள்: வாழைப்பழங்களில் நிரம்பியுள்ள அதிகளவு கார்போஹைட்ரேட், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உடலின் தசைகளைத் தளர்த்தி திருப்திகரமான தூக்கத்தைக் கொண்டுவர உதவும்.
2. ஆளி, பூசணி விதைகள்: ஆளி மற்றும் பூசணி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மெக்னீசியம் மற்றும் டிரிப்டோபான் ஆகியவை உள்ளன. மெக்னீசியம் தசைகளைத் தளர்த்தும், டிரிப்டோபான் செரோடோனின் என்ற மகிழ்ச்சி ஹார்மோனை வெளியிட உதவுகிறது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கவலை மற்றும் மனச்சோர்வைக் குறைத்து நல்ல தூக்கத்தைத் தூண்டுகிறது.
3. பாதாம்: பாதாம் பருப்பில் மெக்னீசியம் அடர்த்தியாக இருப்பதால் ஆழ்ந்தத் தூக்கத்தைப் பெற இது உதவுகிறது. இது தவிர, தூங்கும்போது இரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் இது உதவுகிறது.
4. வெதுவெதுப்பான பால்: பாலில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் செரோடோனினாக மாறுகிறது. செரோடோனின் மூளையில் அமைதியான விளைவுகளைத் தூண்டி தூக்கத்தை வரவழைக்கிறது.
5. காய்கறிகள் மற்றும் தானியங்கள்: கருப்பு பீன்ஸ், பட்டாணி, ப்ரோக்கோலி, வெங்காயம், தக்காளி, கடற்பாசி, சோயாபீன்ஸ், வெள்ளரி, பசலைக்கீரை, முள்ளங்கி, சோளம், கொண்டைக்கடலை போன்ற உணவுகளை உறங்குவதற்கு குறைந்தது 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். கால்களை இரண்டு நிமிடங்கள் வெந்நீரில் ஊறவைப்பது, நரம்புகள் மற்றும் தசைகளை தளர்த்த உதவுகிறது. இதனால் விரைவில் தூக்கத்துக்கும் வழிவகுக்கிறது.