சீனாவை அச்சுறுத்திய நிலநடுக்கம் – மீட்புப் பணிகள் தீவிரம்
சீனாவின் வடமேற்கில் உள்ள கான்சு (Gansu) மாநிலத்தை உலுக்கிய நிலநடுக்கத்தில் மாண்டோர் எண்ணிக்கை 127ஆக அதிகரித்துள்ளது.
700க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 2ஆவது நாளாக தேடல், மீட்புப் பணிகள் தொடருகின்றன. கூடுதல் ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் அந்தப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மரண எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கான்சு மாநிலத்தில் சுமார் 150,000 வீடுகள் நிலநடுக்கத்தால் சேதமடைந்துள்ளன.
வீடுகளை இழந்த குடியிருப்பாளர்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கம் மிக மோசமாக உலுக்கிய டஹேஜியா (Dahejia) நகரில் உணவு, போர்வை, மெத்தை, அடுப்பு போன்ற அத்தியாவசியப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இரவில் கடுங்குளிரில் வாடும் மக்களுக்கு உதவ மருத்துவ ஊழியர்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (19 டிசம்பர்) தட்பநிலை பூஜ்யத்துக்குக் கீழ் 13 டிகிரி செல்சியஸாக இருந்தது.