திரையரங்குகளில் பட்டையை கிளப்பும் “டிராகன்”…

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கயாடு லோகர் ஆகியோர் பலரது நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் படம் தான் டிராகன்.
பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவன் தனது காதலை வெளிப்படுத்தும் போது அந்த பெண் தனக்கு நன்றாக படிக்கும் பையனை விட ரௌடித்தனம் செய்யக் கூடிய பையனைத் தான் பிடிக்கும் என்று சொல்லிவிடுகிறாள். இதனால் கல்லூரிக்கு சென்று அடிப்பது, ரௌடித்தனம் செய்வது, மோசமாக படிப்பது என்று எல்லா வேலையும் செய்து கடைசியில் 48 அரீயர் வைக்கும் நிலைக்கு வருகிறார் ஹீரோ.
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அந்த ஹீரோவை ஹீரோயினும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார். கல்லூரி முடிந்த பிறகு எந்த வேலைக்கும் போகாத ஹீரோ வேலைக்கு செல்கிறேன் என்ற பெயரில் பெற்றோரை ஏமாற்றி வருகிறார்.
ஒரு கட்டத்தில் தன்னை உயிருக்கு உயிராக காதலித்த ஹீரோயின் அனுபமா பரமேஸ்வரன் ரூ.1,20,000 சம்பளம் வாங்கும் வேறொரு பையனை திருமணம் செய்து கொள்ளும் நிலைக்கு வருகிறார்.
இதனால், ஏமாற்றம் அடைந்த பிரதீப் ரூ.1,20,001 சம்பளம் வாங்க வேண்டும் என்பதற்காக டிகிரி முடித்தது போன்று அந்த 48 அரியரையும் எழுதி பாஸ் செய்தது போன்று போலி சான்றிதழ் பெற்று ஒரு கம்பெனியில் வேலைக்கு சேருகிறார்.
அந்த கம்பெனி அவருக்கு ரூ.1,30,000 சம்பளம் கொடுக்கிறது. அதன் பிறகு அவரது வாழ்க்கை மாறுகிறது. கயாடு லோகருடன் திருமண நிச்சயதார்த்தமும் முடிகிறது. அப்போது தான் எதிர்பாராத விதமாக கல்லூர் முதல்வர் பிரதீப் ரங்கநாதனை சந்தித்து அவரது கம்பெனிக்கு வருகிறார்.
இதையடுத்து உண்மையாக அவர் அந்த 48 பேப்பரையும் எழுதி முடித்தாரா? அதே கம்பெனியில் மீண்டும் வேலை கிடைத்ததா? கயாடு லோஹருடன் திருமணம் நடந்ததா என்பது தான் டிராகன் படத்தோட மீதி கதை. படம் வெளியானது முதல் எந்தவித குறையும் இல்லாமல் ரசிகர்களை வியக்க வைக்கும் அளவிற்கு படத்தின் கதையும் காட்சிகளும் அமைந்திருக்கிறது.
உலகம் முழுவதும் வெளியான டிராகன் படம் முதல் நாளில் ரூ.11.2 கோடி வசூல் குவித்துள்ளது. வளர்ந்து வரும் புதுமுக ஹீரோவின் படம் இத்தனை கோடி குவிப்பது என்பது இதுவே முதல் முறை. இது அவருடைய 2ஆவது படம். லவ் டுடே படமும் வித்தியாசமான கதையம்சத்துடன் திரைக்கு வந்து பல சாதனைகளை படைத்தது. இதே போன்று தான் டிராகன் படமும் வித்தியாசமான கதையுடன் திரைக்கு வந்துள்ளது.
முதல் நாளில் ரூ.11.2 கோடி வசூல் குவித்த நிலையில் 2ஆவது நாளான நேற்று இந்தப் படம் உலகளவில் ரூ.15.4 கோடி வசூல் குவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.10.25 கோடி வசூல் குவித்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக ரூ.26.6 கோடி வசூல் குவித்துள்ளது. தமிழகத்தில் ரூ.16 கோடி வசூல் குவித்துள்ளது. இன்று வார விடுமுறை நாள் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.