இந்த நாடுகளுக்குச் செல்லவேண்டாம்: ஜேர்மன் வெளியியுறவு அமைச்சகம் விடுத்துள்ள பயண எச்சரிக்கை
நேற்று ஞாயிற்றுக்கிழமை, ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம், இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் தொடர்புடைய நாடுகள் தொடர்பில் பயண எச்சரிக்கையை வெளியிட்டது.இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான் ஆகிய நாடுகளுக்குச் செல்வது தொடர்பில் ஜேர்மனி பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
காசா பகுதியில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதலில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுவதைத் தொடர்ந்து, ஜேர்மனியின் வெளியுறவு அலுவலகம், இஸ்ரேல், பாலஸ்தீனிய பிரதேசங்கள் மற்றும் லெபனானுக்கான பயண எச்சரிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. காசா பகுதி தொடர்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முந்தைய வார இறுதியில் ஹமாஸ் ஆயுதக்குழுவால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்த பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இத்தாக்குதலில் சுமார் 1,300 இஸ்ரேலியர்கள் மற்றும் பிற வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.இதற்கிடையில், ஜேர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சா, பாதுகாப்புக் காரணங்களைக் காரணம் காட்டி, இஸ்ரேலில் இருந்து ஜேர்மன் பயணிகளை ஏற்றிச் செல்லும் சிறப்பு விமானங்களை சனிக்கிழமை நிறுத்தியது.
அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் தாக்குதல்களை ஆரம்பித்ததில் இருந்து இதுவரை சுமார் 2,800 ஜேர்மன் குடிமக்கள் இஸ்ரேலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.இந்நிலையில், முந்தைய 24 மணி நேரத்தில், மூன்று விமானப்படை விமானங்களில் 160 பேர் ஜேர்மனிக்கு அழைத்து வரப்பட்டதாக வெளியுறவு அலுவலகத்துடன் இணைந்து ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அறிவித்தது. தேவைப்பட்டால் மேலும் மக்களை வெளியேற்றுவதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.