நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி தற்போது தலைநகரம் 2 படத்தின் ரிலீசில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அரண்மனை 4 படத்தையும் ரிலீசுக்கு தயாராக்கியுள்ளார் சுந்தர் சி.
இந்த நிலையில், அவரது சமீபத்திய பேட்டியில் நீண்ட நாட்கள் கிடப்பில் உள்ள அவரது கனவுப்படமான சங்கமித்ரா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதே 450 கோடி பட்ஜெட்… ஜெயம் ரவிக்கு பதிலாக சுந்தர் சி டிக் செய்த ஹீரோ… கரையேறுமா சங்கமித்ரா? அதற்கு பதிலளித்த சுந்தர் சி,

சங்கமித்ரா தன்னுடைய வாழ்நாள் கனவு என்றும் இந்தப் படம் வெளியானால் தன்மீதான ரசிகர்களின் கணிப்பு மாறும் என்றும் கூறியுள்ளார்.
இந்திய அளவில் மிகவும் பிரம்மாண்டமான படமாக இந்தப் படம் அமையும் என்றும் சர்வதேச தரத்தில் படத்தை உருவாக்கவுள்ளதாகவும் மேலும் கூறியுள்ளார். இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் தற்போது பிரம்மாண்டமான செட் அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுந்தர் சி இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே சங்கமித்ரா என்ற வரலாற்றுப்படம் அறிவிக்கப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டில் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. ஆனால் தயாரிப்புத்தரப்பில் ஏற்பட்ட சிக்கல்களால் இந்தப் படம் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது.

முன்னதாக ஜெயம்ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் கமிட்டாகியிருந்தனர். இந்நிலையில் தற்போது ஹீரோக்கள் மாற்றப்பட்டுள்ளனர். படத்தில் ஆர்யா, விஷால் லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ள நிலையில், நாயகியாக முன்னணி ஹீரோயின் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் 2 அல்லது மூன்று வருடங்கள் நீடிக்கலாம் என்றும் சுந்தர் சி தெரிவித்துள்ளார். மேலும் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கமித்ரா படம் அதிகமான பொருட்செலவில் உருவாகவுள்ள நிலையில், படம் பாகுபலியின் உருவாக்கத்தை மிஞ்சுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.